21 March 2007

மணலாற்று ஆக்கிரமிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள விடுதலைப் புலிகள் தயார்

சு.ப.தமிழ்ச்செல்வன்

திங்கட்கிழமை, 5 மார்ச் 2007, 15:10 ஈழம்] [புதினம் நிருபர்]

தமிழர் தாயகத்தில் மணலாற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள சிறிலங்காப் படையினர் முழுமையான தயார்படுத்தலை மேற்கொண்டுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கும் இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை 11.30 மணிமுதல் 1.30 மணிவரை கிளிநொச்சியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பு முடிவுற்ற பின்னர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணல்:

கேள்வி: இன்றைய சந்திப்பு தொடர்பாக?

பதில்: தற்போதைய நிலைமைகள் தொடர்பாக இன்று கலந்துரையாடினோம். முக்கியமாக போர் நிறுத்த உடன்பாட்டை சீர்குலைத்து சிறிலங்காப் படைகள் எமது தாயகத்தின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள வன்முறைகள், ஆக்கிரமிப்பு முயற்சிகள், படுகொலைகள், ஆட்கடத்தல்கள், குண்டுவீச்சுக்கள், மனித உரிமை மீறல்கள் பற்றி சந்திப்பில் விரிவாக விளக்கினோம்.

இந்த விடயங்களில் அனைத்துலக சமூகம் வன்முறைகளை நிறுத்தி அமைதி முயற்சிகளை முன்னெடுக்கும் படி கோரி வரும் நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் யுத்த வெறிப் போக்கும், மனிதப் படுகொலைகள் தொடர்பாகவும் அனைத்துலக சமூகம் ஒரு மென்மையான போக்கை கடைப்பிடிக்கின்ற நிலைப்பாடு எதிர்காலத்தில் அமைதி முயற்சிகளை முன்னெடுக்கின்ற சாத்தியப் பாடுகளை சீர்குலைக்கும் என்ற ஆபத்தான சூழலையும் சந்திப்பில் சுட்டிக்காட்டினோம்.

அனைத்துலக சமூகம் தற்போது கடைப்பிடித்து வரும் அணுகுமுறை சிறிலங்கா அரசாங்கத்தை ஒரு வழிக்கு கொண்டு வரப்போவதில்லை. இது இலங்கைத் தீவை இரத்தக் களரி நிலைக்குத் தான் கொண்டு வரப்போகின்றது. யுத்த நிறுத்த உடன்பாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

அண்மையில் பல நாட்டுத் தூதுவர்கள் அடங்கிய குழுவை மட்டக்களப்புக்கு அழைத்து வந்தபோது ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பாக எமது கவலையையும் எமது நிலைப்பாட்டையும் தெளிவிபடுத்தியிருந்தோம்.

சிறிலங்கா அரசாங்கத்தினாலும் அதன் படைத்தரப்பினாலும் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்ட நடவடிக்கையாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டினோம். எமது விசாரணைக் குழுவின் அறிக்கையின் படி சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்ட ரீதியில் வெளிநாட்டு இராஐதந்திரிகளை ஆபத்தான சூழ்நிலைக்கு சிக்கவைத்து பேரழிவை ஏற்படுத்தி அனைத்துலக மட்டத்தில் தமிழர்களுடைய போராட்ட முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் அபகீர்தியை ஏற்படுத்தும் வகையில் ஒரு திட்டமிட்ட ரீதியில் சிறிலங்கா படைத் தரப்பினரால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான விடயங்களை இன்றைய சந்திப்பில் ஆதாரங்களுடன் விளக்கினோம். தூதுவர்கள் மட்டக்களப்புக்கு பயணம் செய்வது தொடர்பான செய்தியை மனிதாபிமான அமைப்புக்கள் ஊடாகவோ ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களின் ஊடாகவோ எமக்கு எந்த தகவல்களையும் தரவில்லை. தகவல்களை எமக்கு தெரியப்படுத்தாமல் தூதுவர்கள் வந்து இறங்கும் இடத்திலிருந்து தொடர்ச்சியாக காலையில் தாக்குதலை நடத்திவிட்டு பின்னர் தூதுவர்களை அவ்விடத்தில் வானூர்திகள் மூலம் தரையிறக்குவது என்பது பொருத்தமற்ற விடயம். தூதுவர்களை ஆபத்தான சூழலுக்குள் கொண்டு செல்வதாகும். அது ஒரு சதி நடவடிக்கை என்பதையும் சந்திப்பில் விளக்கினோம்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக எங்களுடைய தாயகப் பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை. மனிதாபிமான பணியாளர்கள் வெளிநாட்டு இராஐதந்திரிகள், ஊடகவியலாளர்கள் எமது பகுதிக்கு வந்து செல்வதுடன் பணியாற்றுகின்றனர். மட்டக்களப்புச் சம்பவம் சிறிலங்கா படைத்தரப்பினரால் திட்டமிட்ட சதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை நோர்வேத் தூதுவர் ஆகிய தாங்கள் ஏனைய வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கும் படி வேண்டியிருக்கின்றோம்.

முக்கியமாக எமது தாயகப் பகுதிகளை கூடுதலாக ஆக்கிரமிக்க சிறிலங்கா அரசாங்கம் முயன்று கொண்டிருக்கின்றது. தென் தமிழீழத்தில் சம்பூர், வாகரை போன்ற பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டு தென் தமிழீழத்தில் பாரியளவில் படை நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. அதே போன்று மணலாறு பகுதியை ஆக்கிரமிப்பதற்கும் முல்லைத்தீவு மீது பாரியளவிலான படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் சிறிலங்காப் படைத்தரப்பு ஈடுபட்டுள்ளது.

மணலாற்றுப் பகுதியில் பாரியளவில் படைகளை குவித்து ஆயுத தளபாடங்களை நகர்த்தி பாரியதொரு படை நடவடிக்கைக்கு சிறிலங்கா படை தயாராகி வருகின்றது என்பதை நோர்வே தூதுவருக்கு இன்று சுட்டிக்காட்டியுள்ளோம்.

சிறிலங்கா அரசாங்கம் ஒரு போதும் தனது இராணுவ முன்னெடுப்புக்களை கைவிடுவதாகவோ, அல்லது நிறுத்துவதாகவோ இல்லை. போர் நிறுத்த உடன்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் மதிக்கப்போவதில்லை. அனைத்துலக சமூகத்தின் கரிசனைகளை சிறிலங்கா அரசாங்கம் மதித்து நடக்கும் நிலையில் இல்லை. சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகவே யுத்த வெறிப்போக்கொடு பாரியளவில் தமிழ் மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்தும் வகையில் தான் செயற்பாடுகளில் இறங்கியிருக்கின்றார்கள்.

இவற்றுக்கு உதாரணமாக கிழக்கில் இடம்பெற்ற சம்பவங்களும் முல்லைத்தீவு, மணலாறு பகுதிகளை ஆக்கிரமிக்க பாரியளவில் சிறிலங்காப் படைகள் தயாராகிக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டினோம். மணலாற்றில் இருக்கின்ற எமது படையணிகள் சிறிலங்காப் படைகள் குவிக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். எமது உளவுத் தகவல்களின் அடிப்படையில் மணலாற்றில் சிறிலங்கா படைகள் ஆயுத தளபாடங்களை குவித்துள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

சிறிலங்காப் படைகளின் முயற்சிகளை முறியடிப்பதற்கு எமது படையணிகளும் தயராகிக்கொண்டிருக்கின்றது. இது ஒரு பாரியளவிலான யுத்தமாக வெடிக்கும் என்பதை சுட்டிக்காட்டினோம். சிறிலங்காப் படைகளின் இப்படியான முயற்சிகள் மகிந்த ராஐபக்ச அரசின் இலங்கைத் தீவையே முழு யுத்த களத்திற்கு கொண்டு செல்லுகின்ற நிலையினை உருவாக்கும் என்பதை சுட்டிக்காட்டி எமது கண்டனத்தையும் தெரிவித்தோம்.

இந்த நிலையில் அனைத்துலக சமூகம் மென்மையான போக்கை கடைப்பிடிப்பது சிறிலங்கா அரசாங்கத்திற்கு தூண்டுதலாக அமைகின்றது. தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் பொறுமை காக்கின்ற நிலைமை ஏற்படாது. அனைத்து யுத்திகளையும் தந்திரோபாயங்களையும் பயன்படுத்தி கடந்த காலங்கள் போல பரந்த அளவில் தீவிரப்படுதும் நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

அனைத்துலக சமூகம் தமிழீழ விடுதலைப் புலிகளை கண்டிப்பது, ஒருதலைப்பட்சமாக குற்றம் சுமத்துவதை தவிர்க்க வேண்டும். சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களையும் பார்த்துவிட்டு எமது நடவடிக்கைகள் தீவிரம் அடையும் போது கண்டனம் தெரிவிப்பதில் அர்த்தம் இல்லை என்பதை அனைத்துலக சமூகத்திற்கு தெளிவாக்கும் படி நோர்வே தூதுவரிடம் கோரியிருக்கின்றோம்.

கேள்வி: இணைத் தலைமைகள் நாடுகளிடமிருந்து ஏதாவது செய்திகள் எடுத்து வரப்பட்டதா?

பதில்: இணைத் தலைமை நாடுகளின் செய்திகள் என்று எதுவும் எடுத்து வரப்படவில்லை. அனைத்துலக சமூகத்தின் கரிசனையாக வன்முறைகள் நிறுத்தப்பட்டு சமரச முயற்சிகள் மீண்டும் தொடக்கப்பட வேண்டும் என்பது அனைத்துலக சமூகத்தின் விரும்பமாகும்.

நாம் அனைத்துலக சமூகத்திடம் முன்வைத்த நிலைப்பாடு எந்த அடிப்படையில் இதனை முன்னெடுப்பது என்பதாகும். யுத்த நிறுத்த உடன்படிக்கை என்பது பல தசாப்தங்களாக இடம்பெற்ற உக்கிர சமருக்கு ஒரு சிறிய இடைவெளியாவது கொடுத்து அதற்கான பாதையை திறந்து விட்டது.

போர் நிறுத்த உடன்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் தூக்கியெறிந்து, சிறிலங்கா அரசாங்கம் கூட ஏன் மகிந்த ராஐபக்ச கூட போர் நிறுத்த உடன்பாட்டை விமர்சித்து இருக்கின்றார். அரச மட்ட அமைச்சர்கள் கூட போர் நிறுத்த உடன்பாட்டை விமர்சித்து உதாசீனப்படுத்தியிருக்கின்றார்கள். நடைமுறையில் சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்த உடன்பாட்டை மீறிவரும் நிலையில் வன்முறைகளை நிறுத்தி பேச்சுக்களை முன்னெடுப்பது என்பது பற்றி கேள்வி எழுப்பினோம்.

அனைத்துலக சமூகம் எதனையும் கொண்டு வரும் நிலையில் இல்லை. சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக அளவில் மனிதாபிமான அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள் என குற்றம் சுமத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மனிதப் பேரவலம் இலங்கைத் தீவில் அதிகரித்துள்ளது. உலக நாடுகளில் மிக மோசமாக மனித உரிமை மீறும் நாடாக பட்டியல் வகிக்கும் நாடுகளில் சிறிலங்கா முதன்மையான இடத்தை பிடித்துள்ளது. இது அனைத்துலக அளவில் ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்துலக நாடுகள் இராணுவ பொருளாதார உதவிகளை அனைத்துலக சமூகம் நிறுத்தி சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவில்லை என்பது எமது மக்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினோம்.

கேள்வி: அணுசரணைப் பணியில் ஈடுபட்டுபட்டிருக்கின்ற நோர்வேத் தரப்பு இதுவரை சிறிலங்காப் படைகளின் ஆக்கிரமிப்பு அத்துமீறல்கள் தொடர்பாக அதனை நிறுத்துவதற்கான அழுத்தத்தை சிறிலங்கா அரசிற்கு கொடுக்கவில்லை ஏன்?

பதில்: இது தொடர்பான கவலையையும் நாங்கள் தெரிவித்திருக்கின்றோம். நோர்வே அணுசரணையாளர்களும் அனைத்துலக சமூகமும் சிறிலங்கா அரசாங்கத்தின் வலிந்த தாக்குதல்களை படை நடவடிக்கைளை பாரிய மனித உரிமை மீறல்களை தடுக்கவில்லை ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவிலை என்பதை நாங்கள் இன்று சுட்டிக்காட்டினோம். அது தொடர்பான கவலையையும் தெரிவித்திருக்கின்றோம்.

Quelle - Puthinam

No comments: