23 May 2009

பிரபாகரன் மரணம்: பின் தொடரும் கேள்விகள்

வித்தியாசமான கோணத்தில் ஒரு ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றது முடிவு உங்கள் கைகளில்

- ஆதிசிவம்@சென்னை -

ஒரு வழியாக மாவிலாற்றில் 2006-ல் தொடங்கிய நான்காவது ஈழப் போர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணச் செய்தியுடன் முடிவடைந்திருக்கிறது. இலங்கை அரசுத் தரப்பினர், ""மூன்று தசாம்ச கால பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது; விடுதலைப் புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டனர்'' என்று இச்சூழலை வர்ணித்துவரும் நிலையில், ஈழப் போரைத் தொடர்ந்து கூர்ந்து அவதானித்துவருபவர்களோ பல்வேறு யூகங்களை எழுப்புகின்றனர்.

மரணம் எழுப்பும் கேள்விகள்:

இலங்கை அரசு பிரபாகரனின் சடலம் என்று சுட்டிக்காட்டும் சடலத்தை முன்வைத்தே பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆழமற்ற களப்புப் பகுதியிலிருந்து பிரபாகரன் எங்கே தப்பிச் செல்ல முயன்றார்? கடல் பரப்பு முழுவதையும் ராணுவம் கைப்பற்றிவிட்ட நிலையில், நீரிழிவு நோயாளியான அவர் நீண்ட தூர கடல் பயணம் மேற்கொள்ளக்கூடிய வகையில் வசதியான நவீன படகு அல்லது கப்பலுக்கு அங்கு ஏது வழி? தப்பிச் செல்ல நினைக்கும் ஒருவர் முக அமைப்பை மாற்றிக்கொள்ளாமலோ, மாறுவேஷத்திலோ இல்லாமல் சீருடையில் அடையாள அட்டையுடனா செல்வார்? அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படும் வகையில் தலைப் பகுதி சரியாக சிதைக்கப்பட்டிருப்பது எப்படி?...

இப்படி ஏராளமான கேள்விகள் முன்வைக்கப்படுவதோடு முக்கியமான ஒரு விஷயமும் சுட்டிக்காட்டப்படுகிறது. அது: பிரபாகரன் போன்ற உருவத் தோற்றமுடையவரைப் பற்றிய செய்திகள்.

நீண்ட காலமாகவே பிரபாகரனைப் போன்றே உருவத் தோற்றமுடையவரை புலிகள் வெளியுலகுக்குப் பயன்படுத்தி வருவதாகவும் உண்மையில், பிரபாகரன் இருக்குமிடம் அவருடைய நெருங்கிய சில கூட்டாளிகளைத் தவிர்த்து வேறு எவருக்கும் தெரியாது என்றும் கூறப்பட்டுவருகிறது.

இதை புலிகளுக்கு மிக நெருக்கமானவர்களும் அந்த இயக்கத்திலிருந்தே விலகியவர்களும்கூட சொல்வதுண்டு. ஊடகங்களிலும் அவ்வப்போது இது தொடர்பான செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இந்நிலையில், பிரபாகரன் மரணச் செய்தியைத் திட்டமிட்டு புலிகள் கட்டமைத்திருக்கிறார்கள் என்று நம்புவதற்கு ஏராளமான தரவுகள் கிடைத்திருக்கின்றன.

பதுங்குக் குழி ஆதாரங்கள்:

பிரபாகரன் தங்கியிருந்ததாக ராணுவம் நம்பும் எல்லா பதுங்குக் குழிகளிலுமே பிரபாகரன் அங்கிருந்ததற்கான ஆதாரமாக ஏதேனும் சில பொருட்களை விட்டுச் செல்லும் தந்திரத்தை புலிகள் கையாண்டனர்.

சில பதுங்குக் குழிகளில் அவர் அணியக் கூடிய அளவுடைய சட்டை, தொப்பி; சில இடங்களில் "இன்சுலின்' ஊசிகள் (பிரபாகரன் நீரிழிவு நோயாளி), சில இடங்களில் அவர் படுத்திருந்தது என்று நம்பத் தக்க வகையில் படுக்கை, அவருடைய குடும்ப புகைப்படங்கள், சான்றிதழ்கள் இப்படி...

இதற்கு முன்னர், மரபணுச் சோதனை நடத்துவதற்கு பிரபாகரன் தொடர்பான குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் இலங்கை ராணுவத்திடம் ஏதும் இல்லாத நிலையில், இந்த ஆதாரங்களைத் திட்டமிட்டே புலிகள் விட்டுச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதாவது, பிரபாகரன் உருவமைப்பைக் கொண்ட ஒரு நபர் பயன்படுத்திய பொருட்களை விட்டுச் சென்று, பிற்பாடு பிரபாகரனுக்குப் பதில் அவருடைய சிதைந்த சடலத்தை பிரபாகரன் என்று நம்ப வைப்பதற்கான ஓர் உத்தி.

பதுங்கும் இடத்தை யார் கூறுவார்?:

பொதுவாக விடுதலைப் புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்கள் இருக்குமிடங்களே பரம ரகசியமாக இருக்கும். ஆனால், ஒரு சதுர கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் சுற்றி வளைக்கப்படும் வரை பிரபாகரன் இங்குதான் இருக்கிறார் என்பதைத் திரும்பத் திரும்ப புலிகள் கூறிக்கொண்டிருந்தனர். இது பெரிய அளவிலான சந்தேகங்களை எழுப்புகிறது.

அந்த அமைப்பின் அரசியல் தொடர்பாளர் நடேசன் உள்ளிட்ட ஊடகத் தொடர்பாளர்கள் மட்டுமின்றி, அரசுப் படையினரிடம் சரணடைந்த புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்களும்கூட இதையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.

போரின் கடைசி இலக்கே பிரபாகரன்தான் என்ற சூழலில், பிரபாகரனைப் பாதுகாப்பதற்காகவே ஒரு சிறப்புப் படையையே நிறுவும் அளவுக்கு அவருடைய உயிரில் அக்கறையுடைய புலிகள், அவர் இருக்குமிடத்தை எப்படி அலட்சியமாகப் பறைச்சாற்றுவார்கள்?

ஆகையால், ராணுவத்தை திசைத் திருப்புவதற்காகவே புலிகள் திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தங்கள் தந்திரத்துக்கு உறுதி சேர்க்கும் வகையிலேயே நடேசன் உள்ளிட்ட இரண்டாம் நிலைத் தலைவர்களை போர்க்களத்திலேயே இருக்குமாறு செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

மரணச் செய்தி - இரு தரப்புகளின் நிர்ப்பந்த சூழல்:

இந்தப் போரின் வெவ்வேறு காலகட்டங்களிலும் இலக்குகளை மாற்றி மாற்றி அறிவித்தாலும், உண்மையில் இலங்கை அரசின் இறுதி இலக்கு பிரபாகரன்தான். போர்க் காலகட்டத்தின் இடையே நடைபெற்ற தேர்தல்களிலும் இதைப் பிரதான முழக்கமாக முன்வைத்தே இலங்கை அதிபர் ராஜபக்ஷ வெற்றிகளைக் குவித்தார்.

எனவே, வெறும் நிலப்பரப்பைக் கைப்பற்றியதோடு போரை முடித்துக்கொண்டதாக அறிவித்தால், அரசியல் ரீதியாக அவருக்குப் பெரும் பின்னடைவு ஏற்படுவதோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தை வேறறுத்துவிட்டதாக முன்னெடுக்கப்படும் பிரசாரமும் முழு வெற்றி பெறாது.

ஆகையால், இலங்கை அரசுக்கும் ராணுவத்துக்கும் பிரபாகரன் மரணத்தின் மீது வலுவான சந்தேகங்கள் இருந்தாலும், தற்போதைய சூழலில் அப்படியொரு அறிவிப்பை வெளியிட வேண்டிய நிலையிலேயே அரசுத் தரப்பு இருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, விடுதலைப் புலிகளும் இப்படியொரு நிர்ப்பந்தத்திலேயே இருக்கின்றனர். முக்கியமான காரணம், போர்ச் சூழலிலிருந்து விடுபடுவதாகும். முன்னதாக, அமெரிக்காவில் புதிய அரசு பொறுப்பேற்றதுமே அமெரிக்க அணுகுமுறையில் மாற்றங்களை அவர்கள் எதிர்பார்த்தனர். அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தனர். இங்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படாவிடில் மேற்கொள்ள வேண்டிய காரியங்களை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தனர். போர்ச் சூழலில் புதிய வாய்ப்புகள் ஏதுமற்ற நிலையில், சில காலத்துக்கு பதுங்கியிருப்பதே நல்லது என்று அவர்கள் கருதினர். இந்நிலையில், பிரபாகரனின் மரணச் செய்தி ராணுவ நடவடிக்கைகளிலிருந்து தப்ப உதவுவதோடு, உலகின் கவனத்தையும் தமிழ் மக்களின் அவலத்தை நோக்கித் திருப்ப முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

முடிவுகளைத் தீர்மானித்த ஆனந்தபுரம்:

இந்தப் போரின் தொடக்கத்திலிருந்தே ராணுவம் உள்ளே புக அனுமதிப்பதை புலிகள் ஒரு தந்திரமாகப் பயன்படுத்தினர். சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் இதேபோன்ற உத்தியைத்தான் அவர்கள் பின்பற்றினர். இலங்கை ராணுவம் முழுவதையும் உள்ளேவிட்டு, திடீரென ஊடறுப்புத் தாக்குதல் மூலம் ஏறத்தாழ 40,000 வீரர்களை அவர்கள் சுற்றி வளைத்தனர்.

அப்போது சர்வதேச நாடுகளும் இந்தியாவில் ஆட்சியிலிருந்த பாஜக தலைமையிலான அரசு இப்பிரச்னையில் தலையிட்டதன்பேரில், இலங்கை வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இம்முறையும் இதே போன்ற ஒரு பாரிய தாக்குதலுக்கு புலிகள் திட்டமிட்டிருந்தனர். அதற்காக அவர்கள் ஒன்றுகூடிய இடம் ஆனந்தபுரம். ஒரு சிறிய பிரதேசத்தில் புலிகள் அமைப்பின் முக்கியமான களத் தளபதிகள் பலர் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் பெரும் தளவாடங்களுடன் குவிந்திருந்த இந்தச் செய்தியை "ரா' அமைப்பின் மூலம் இலங்கை ராணுவம் அறிந்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ராணுவம் முன்னெடுத்த பாரிய தாக்குதலில் புலிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். ஏப்ரல் முதல் வாரத்தில் நடந்த இத்தாக்குதலில் ராணுவத் தரப்பில் சுமார் 15,000 வீரர்கள் வரை ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடும் போரின் இறுதியில் முக்கிய கள தளபதிகள் உள்பட ஏறத்தாழ அங்கு கூடியிருந்த அனைத்துப் புலிகளும் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலுக்குப் பின்னரே, புலிகளின் மாபெரும் வீழ்ச்சி தொடங்கியது எனலாம். கிளிநொச்சி கைவிட்டுப்போன பின்னர், ஏறத்தாழ மூன்று மாதங்கள் வரை புதுக்குடியிருப்பில் கடுமையாகப் போராடிய புலிகள் இத்தாக்குதலுக்குப் பின்னரே முற்றிலுமாக ஒடுங்கிப் போயினர்.

கிழக்குக்குத் தப்பினார் பிரபாகரன்?:

ஆனந்தபுரம் வியூகம் தோல்வியடைந்த பின்னர், முடிவை புலிகள் ஓரளவுக்கு யூகிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால், கடல் வழியாக பிரபாகரன் தப்பிக்கத் தயாராக இருப்பதாக புலிகளே தகவல்களைக் கசியவிட்டனர். ராணுவத்தின் ஒட்டுமொத்த கவனமும் கடல் பரப்பின் மீது குவிந்திருந்த நிலையில், ஏப்ரல் மத்தியில் கிழக்குப் பகுதிக்கு பிரபாகரன் தப்பிவிட்டதாகக் கூறப்பட்டது.

இலங்கையின் கிழக்குப் பகுதி விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டு விட்டாலும், இன்னமும் அங்கு அவ்வப்போது கொரில்ல தாக்குதல்களை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றனர் புலிகள். குறிப்பாக யாலா காட்டுப் பகுதியில் ஏராளமான புலிகள் பதுங்கி இருக்கின்றனர்.

ஆகையால், ஏப்ரல் மத்தியில் கிழக்குப் பகுதிக்கு பிரபாகரன் தப்பியிருக்கலாம் என்று இலங்கை புலனாய்வுத் துறையே வலுவாகச் சந்தேகிக்கிறது. இன்னொருபுறம் சில மாதங்களுக்கு முன்னரே அவர் வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கலாம் என்றும் சந்தேகமும் அவர்களிடம் இருக்கிறது.

உலகம் முழுவதும் தொடர்புகள்:

மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது ஒட்டுமொத்த புலிகள் அமைப்பும் ஏதோ முல்லைத்தீவுக்குள்ளேயே முடக்கப்பட்டுவிட்டது போன்றும் பிரபாகரனுடன் அந்த அமைப்பே அழிந்துவிட்டதுபோல தோன்றினாலும் உண்மை அதுவல்ல. உலகம் முழுவதும் புலிகள் அமைப்பு பரந்து விரிந்திருக்கிறது. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சில ஆப்பிரிக்க நாடுகள் என்று உலகம் முழுவதும் இன்றளவும் மறைமுகமாகச் செயல்படும் ஏராளமானோர் அந்த அமைப்பில் இருக்கின்றனர். வலுவான பொருளாதாரப் பின்னணியும் ஆதரவளிக்க ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தமிழர்களும் இருக்கின்றனர்.

இது தவிர, பிரபாகரன் குடும்பத்தினர் தொடர்பான சந்தேகங்களும் எழுகின்றன. குறிப்பாக, வெளிநாட்டில் அவருக்கு இன்னொரு மகன் இருப்பதாக நீண்ட காலமாகக் கூறப்பட்டுவந்தாலும் அவர் எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அதேபோல, அவருடைய மனைவி, மகள் ஆகியோருடைய தற்போதைய நிலையும் தெரியவில்லை.

இந்நிலையில், பிரபாகரன் மரணச் செய்தியை அவரைப் பின்தொடரும் நிழல்களே உறுதிப்படுத்த வேண்டும்; அல்லது காலமும் வரலாறும் உறுதிப்படுத்தலாம்

ஆதிசிவம்@சென்னை

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பத்திரமாக உள்ளார்

முல்லைத்தீவு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பத்திரமாக உள்ளார், உயிருடன் உள்ளார். ஆனால் அவர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவமும், அரசும் பொய்ப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன என்று விடுதலைப் புலிகள் இயக்கம் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதால், பிரபாகரன் விவகாரத்தில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தமிழ்நெட் இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில்,

தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார்.

எமது பாசத்துக்குரிய தேசியத் தலைவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணத்தில் தொடர்பு கொள்வார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு உலகு எங்கும் பரந்து விரிந்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் ஆதரவுக் குரலை அடக்கி ஒடுக்கும் முகமாக இலங்கை அரசு, தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பான பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதில் முனைப்பாக உள்ளது.

உலக தமிழ் சமுதாயத்தினர் இந்த பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இன்று தமிழ்நெட் இணையதளத்திற்கு இந்தப் பேட்டியை அளித்துள்ளார் அறிவழகன். இலங்கையில் உள்ள தமிழ்நெட் இணையதள செய்தியாளரை ரகசிய இடத்திலிருந்து தொடர்பு கொண்டு இதைத் தெரிவித்துள்ளார் அறிவழகன். பாதுகாப்பு காரணங்களுக்காக தனது இருப்பிடத்தை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பல்வேறு புலிகள் ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர், செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இருப்பினும் விடுதலைப் புலிகள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த வார்த்தையும் இதுவரை இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் முதல் முறையாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழ்நெட் செய்தி கூறியிருப்பது பிரபாகரன் விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைவர் பிரபாகரன் நலம்

மூத்த உறுப்பினர்கள் பலர் வஞ்சகமாக கொல்லப்பட்டுள்ளனர்": செ.பத்மநாதன் [செவ்வாய்க்கிழமை, 19 மே 2009, 09:08 மு.ப ஈழம்] [வி.நவராஜன்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த இயக்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன், ஆனால், தூரதிர்ஷ்டவசமாக தமது இயக்கத்தின் பல மூத்த உறுப்பினர்கள் வஞ்சகத்தனமாகக் கொல்லப் பட்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். "சிறிலங்கா அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருப் பதாகப் பிரகடனப் படுத்தலாம். ஆனால் இது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை சிறிலங்கா அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கையை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகவே இழந்துவிட்டது" எனவும் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டியில் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.
அவரின் பேட்டியின் முக்கிய விபரங்கள் வருமாறு:

இந்தப் போரில் வெற்றி பெற்றிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருக்கின்றது. இந்தப் போரில் உண்மையிலேயே சிறிலங்கா வெற்றிபெற்றுள்ளதா?

சிறிலங்கா அரசாங்கம் நிரூபிக்க முடியாத ஒரு உரிமை கோரலை வெளியிட்டிருக்கின்றது. எமது தேசியத் தலைவர் உயிருடனும் நலமாகவும் உள்ளார் என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஆனால், எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிரிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை. இது மிகவும் தூரதிர்ஷ்டமானது. ஆனால், எமது மக்களுடைய விருப்பங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்.

சிறிலங்கா இராணுவம் தமக்கு ஒரு இராணுவ வெற்றி கிடைத்திருப்பதாகப் பிரகடனம் செய்யலாம். ஆனால் அது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களுடைய நம்பிக்கையை இவர்கள் முற்றாகவே இழந்துவிட்டனர்.

தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் பார்க்கும்போது விடுதலைப் புலிகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு இராணுவ வழிமுறைகளில் அல்லாமல் ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளையே முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் எமது முன்னய அறிக்கைகள் பலவற்றிலும் தெளிவாகத் தெரிவித்திருந்தோம். எமது மக்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த நிலைப்பாட்டை நாம் எடுத்தோம். தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசியும், எறிகணைகளால் தாக்குதல் நடத்தியும் அவர்களைப் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் போரைப் பயன்படுத்துவதை தொடர்ந்தும் அனுமதிக்க நாம் விரும்பவில்லை.

இந்த விவகாரத்தில் தலையிட்டு தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும், இதனைக் கருத்திற்கொள்ளாமல் தாக்குதல் நடவடிக்கையை தொடர்வதிலேயே சிறிலங்கா அரசு குறியாக இருந்தது. எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி வெள்ளைக்கொடிகளை ஏந்தியவாறு சரணடைய முன்வந்த எமது போராளிகளும் தலைவர்களும் அனைத்துலக நடவடிக்கைகள் அனைத்தையும் மீறும் வகையில் ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கின்றார்கள். இந்த விடயத்தில் ஒரு பலமான நிலைப்பாட்டை எடுத்து சிறிலங்கா அரசாங்கத்தை இணங்கச் செய்வதற்கும் அனைத்துலக சமூகம் மறுத்துவிட்டது.

இந்த நிகழ்வுகளையிட்டு நாம் மிகவும் வருந்துகின்றோம். ஆனால், இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்காலமும் தமிழ்த் தேசியப் பிரச்சினையும் தீர்வு எதுவும் இன்றி தொடர்ந்திருக்கப் போகின்றது.
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுப்பதற்கான தமது பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமது ஆணையை மக்கள் வழங்கியிருக்கின்றனர். இவ்வாறு மக்கள் எமக்கு அளித்துள்ள ஆணையின் அடிப்படையில் பொருத்தமான மாற்றுத் திட்டங்களையிட்டுப் பரிசீலனை செய்வதற்கு எமது அமைப்பு தயாராக இருக்கின்றது.

நீங்கள் அரசியல் தீர்வு ஒன்று தொடர்பாகப் பேசுகின்றீர்கள். ஆனால் கொழும்பு வெளிப்படுத்தும் உணர்வுகளும், தமிழ் மக்களுடைய விருப்பங்களைப் புரிந்துகொள்ளாதவாறு நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் மனநிலையும் இதற்கு ஏற்றதாக உள்ளதா?

சிங்கள மக்களிடம் இருந்து வெளிப்படும் உணர்வுகளும் அவர்களின் போக்கும் துரதிர்ஷ்டமானதாகவே இருக்கின்றது. அந்த நாட்டில் தமிழர்கள் சம உரிமை கொண்ட குடிமக்களாக கருதப்பட்டால் அவர்கள் கெளரவத்துடன் நடத்தப்பட வேண்டும். ஆனால், அரசாங்கமும் அதன் இராணுவத்தினரும் பேரினவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலேயே தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இது, இனங்களுக்கு இடையேயான பிளவுகளை மேலும் அதிகப்படுத்துவதற்கே வழிவகுப்பதாக இருக்கும் என்பதுடன், பகை உணர்வுக்கு முடிவைக் கொண்டுவருவதற்கும் தடையாகவே இருக்கும்.

'விடுதலைப் புலிகளுக்குப் பிற்பட்ட காலம்' எனப் பேசப்படுகின்றது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளால் மக்களை எவ்வாறு அணிதிரட்டி அதற்கான தலைமையை வழங்க முடியும்?

எமது தேசியப் பிரச்சினை ஆசியாவின் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. தற்போது உருவாகியிருக்கும் நிலைமைகளுக்கு இசைவாக எமது தந்திரோபாயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது எமது தலைமைக்குத் தெரியும். புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணி திரண்டு தமது தீவிரமான ஆதரவை உலகம் முழுவதிலும் வெளிப்படுத்தியிருந்தமையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வன்னியில் இடம்பெற்றுள்ள கொடூரம் தமிழர்களிடையேயான ஒற்றுமையை மேலும் பலப்படுத்தியிருக்கின்றது.
இதனைத் தனித்துநின்று சாதிக்க முடியாது என்பது எமக்குத் தெரியும். தமிழர்களின் நலன்களையும், அவர்களுடைய எதிர்காலத்தையும் உறுதிப்படுத்துவதற்காக இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ தமிழர்கள் அல்லது தமிழ் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளக்கூடிய பங்களிப்பை நாம் வரவேற்கின்றோம். இதனை அடைவதற்காக இந்தியாவில் உள்ள தமிழ்க் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுவதற்கு நாம் விரும்புகின்றோம்.

தமிழர்களின் இந்த தேசியப் பிரச்சனையின் அடிப்படையில் பல தமிழ்க் கட்சிகள் முன்னர் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை மேற்கொண்டிருந்தன. அவர்கள் அந்தக் கோட்பாடுகளுக்கு இப்போதும் கெளரவம் கொடுப்பார்கள் என நாம் நம்புகின்றோம். இந்த நிலையில் அதனை அடைவதற்காக இணைந்து செயற்படுவதற்கு அவர்கள் முன்வருவார்கள் என நாம் நம்புகின்றோம்.

பிரபாகரன் தப்பித்துச் சென்றது எப்படி?

- நக்கீரன் புலனாய்வுக் கட்டுரை!
-காமராஜ் (இணையாசிரியர்,நக்கீரன்)

ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள்.

நெருங்கி வரும் சிங்கள ராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம். புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினரால் கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.

களத்தில் இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின் இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்ற வேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந் தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக் கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர் என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது. ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இது இந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமான தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான் போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன் உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்த மண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம் எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

தளபதிகளின் கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில் இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள் கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின் சம்மதித்துள்ளார்.

இதையடுத்து, மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம் குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாக வியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
5000 கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 30-க்கும் அதிகமான கரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படி இருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின் மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்தனர்.

தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும் புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.

புலிகளின் வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்த கோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர். அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது. அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில் பிரபாகரனை ஏறச் செய்தனர்.
அதேவேளையில், வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொரு தற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது. மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ் அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்க வருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின் தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.

தன் குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயது மகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன. மனதை கல்லாக்கிக்கொண்டு, இலட்சி யத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காக பாதுகாப்பாக வெளியேறினார் சூசை.

புலிகளின் அடுத்தடுத்து 23 தற்கொலை தாக்குதல் சம்பவங் களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களை முன்னின்று நடத் திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலி யானார். புலிகளின் கடைசிநேர அதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலைய வைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில் ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கை நெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து, முன்னேற் றத்தை முடக்கியது.
இதனால் பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்கள ராணுவத்தை மிரள வைக்கக் கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல வேண்டு மென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின் மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகைய படகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்து கிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப் பய ணத்தில் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளதாக கள நிலவரங் கள் தெரிவிக்கின்றன.

சிங்கள கடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு. பலவித பிரஷர்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல் வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படை தனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.

ஞாயிறன்று புலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப் பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும் பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள், எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியே முன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்த பகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது. எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின் ஆயுதங்கள் உயிர் குடித்தன.

அந்தத் தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்க முயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள், ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட் லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபா கரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசு மீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள் நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டிருந்தன.

ஞாயிறு இரவிலும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசு கொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப் முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர் பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார். வன்னிக்காட்டில் சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கி வைத்திருந் தனர். சில உடல் கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்ட புலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவை கொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம். புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா, அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு, உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப் பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.

சிங்கள ராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூட கருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத் திரும்பிய கருணா, “மொக்கச் சிங்களனுங்க கோட்டை விட்டுட்டானுங்க’ எனத் தனது சகாக்களிடம் சொல்லி யிருக்கிறார்.

இந்த நிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில், நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புங்கு களை மீடியாக்களுக்குக் கொடுத்தது.

பிரபாகரனின் தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும் கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சய னைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டிய படத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புங்கு களைக் காட்டியதுடன், மதியம் கண்டு பிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாக உறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.

தண்ணீரில் கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம் நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்த கமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்க முடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.

சிங்கள அரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்த வேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும் உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிர பாகரனின் மனைவி, மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.

தன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனே ஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போது சிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிக முக்கியமானவர்கள். நக்கீரனுக்கு கிடைத்துள்ள இந்தத் தகவல், ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


-காமராஜ்

இணையாசிரியர்,
நக்கீரன்