05 June 2006

ஓஸ்லோ பயணம் ஏன்?

சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்கம்
ஞாயிற்றுக்கிழமை, 4 யூன் 2006, 15:47 ஈழம்] [ச.விமலராஜா]

நோர்வேயின் அழைப்பை ஏற்று ஓஸ்லோப் பயணம் செல்வது ஏன் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.

ஓஸ்லோ செல்வதற்கு முன்பாக கிளிநொச்சியில் புலிகளின் குரல் வானொலிக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

எமது ஒஸ்லோப் பயணமானது தாயகத்தில் இன்று ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையை சமூகமான நிலைக்கு கொண்டு வரும் என்று நாங்கள் நம்பவில்லை.

உண்மையிலேயே நாம் ஒஸ்லோவுக்கு போவது என்பது, நோர்வேயினுடைய அழைப்பை ஏற்று அதனை மதித்து இதுவரை காலமாக நோர்வேத் தரப்பு முன்னெடுத்து வந்த அமைதி முயற்சிகள், சமாதான முன்னெடுப்புக்கள், அனுசரணைப் பணிகளுக்கு மதிப்பளிக்கும் முகமாகத்தான் நோர்வே அழைப்பை எங்களுடைய தலைமைப்பீடம் சாதகமாக பரிசீலித்து ஒஸ்லோ பயணத்துக்கு எங்களை செல்லுமாறு எமது தலைவர் பணித்தார். அந்த வகையில் தான் ஒஸ்லோ செல்கின்றோம்.

தமிழர் தாயகத்தில் மிக மோசமாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற இனப்படுகொலைகள், வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை நாம் நோர்வேத் தரப்புக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தெளிவுபடுத்துகின்ற ஒரு முயற்சியாகத்தான் எங்களுடைய பயணம் அமைகின்றது.

ஒருபக்கம் சமாதான அழைப்பை விடுத்துக் கொண்டு, சமாதானத்துக்கு சாதகமாக பேசிக்கொண்டு, பேச்சளவில் ஒன்றையும், செயலளவிலும் முழு அளவில் தமிழர் தாயகத்தை சிதைப்பதும், தமிழர் தாயகத்தில் இனப்படுகொலையை கட்டவிழ்த்து விடுவதும் மிகக் கொடூரமான ஒரு யுத்தத்தை எதிர்நோக்கும் நோக்கோடுதான் செயல், மகிந்த ராஜபக்ச தீவிரமாக செயற்பட்டு வருகின்றார். ஆகவே, மகிந்த ராஜபக்சவிற்கு எந்தவிதத்திலும் சமாதானத்தின் மீது ஆர்வமோ அக்கறையோ இல்லை.

சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களை தணிப்பதற்காகவே பேச்சளவில் இப்படியான பேச்சுக்களை பேசிக்கொண்டிருக்கின்றார் என்பதால் செயற்பாட்டில் எதுவுமில்லை. இதனை அம்லப்படுத்தும் நோக்கோடுதான் ஓஸ்லோவுக்குப் போகிறோம்.

சிறிலங்கா அரசாங்கத்தின் அழுத்தங்கள் மற்றும் தீவிர முயற்சிகளினால் கட்டவிழித்துவிட்டிருக்கின்ற பொய்யான பரப்புரைகளால் சர்வதேச சமூகம் மேற்கொண்டிருக்கிற செயற்பாடுகளால் எங்கள் மக்கள் கவலை அடைந்தது மட்டுமல்லாமல் ஆத்திரமடைந்தும் உள்ளனர்.

தாயகத்தில் அனைத்து மக்களும் பூரண எழுச்சியோடு ஒரு குறிக்கோளுடன் அணிதிரண்டுள்ளன. எங்களுடைய தாயகப் பகுதியை சிறிலங்காப் படைகள் ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு எங்களது மக்களை சித்திரவதை செய்துகொண்டு படுகொலை செய்துகொண்டிருக்கும் வரை சமாதான முயற்சிகள் சாத்தியமில்லை என்பதை மக்கள் உணர்ந்திருக்கின்றனர்.

முழு அளவில் எங்கள் தாயகப் பிரதேச்த்தை மீட்டெடுத்து நிம்மதியாக- சுதந்திரக்காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் மக்களின் ஒட்டுமொத்த அபிலாசையாக இருக்கிறது.

எங்களுடைய தாயகத்தில் வன்முறைகளும் படுகொலைகளும் மிக உச்ச அளவில் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் எமது தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கும் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற வேண்டும் என்ற வெறியோடு மக்கள் உள்ளனர்.

இதனை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துள்ளது. இந்த நிலையில்தான் எங்கள் பயணம் அமைந்திருக்கிறது. எங்களுடைய மக்களின் அபிலாசைகள், எமது தலைவரின் உறுதியான நிலைப்பாடுகளை நேரடியாக எடுத்து விளக்குவதுதான் பொருத்தமாக இருக்கும் என்ற வகையில்தான் எங்கள் தலைவர் ஓஸ்லோ பயணத்துக்கு எங்களை அனுமதிக்க இணங்கினார்.

எங்கள் மக்களினது பூரண உழைப்பு, எழுச்சி மூலமாக எமது தேசத்தின் மீதான ஆக்கிரமிப்புகள் அகன்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் காலம் மிக விரைவில் நெருங்கி வருகிறது என்றார் சு.ப.தமிழ்ச்செல்வன்.

Quelle - Puthinam

04 June 2006

விடுதலைப் புலிகள் குழு ஓஸ்லோ புறப்பட்டது

[ஞாயிற்றுக்கிழமை, 4 யூன் 2006, 17:28 ஈழம்] [ம.சேரமான்]

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தொடர்பான பேச்சுக்களில் கலந்து கொள்வதற்காக ஐந்து பேர் அடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஓஸ்லோ புறப்பட்டுச் சென்றனர்.

எதிர்வரும் 8, 9 ஆம் ஆகிய நாட்களில் இப்பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

சிறிலங்கா உலங்குவானூர்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் கிளிநொச்சியை வந்தடைந்த நோர்வே அனுசரணையாளர்கள், விடுதலைப் புலிகள் குழுவின் பயணத்துக்கான ஒழுங்குகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

அமெரிக்காவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர் உருத்திரகுமாரனும் ஓஸ்லோ பேச்சுக்களில் இணைந்து கொள்கிறார்.