Showing posts with label பிரபாகரன். Show all posts
Showing posts with label பிரபாகரன். Show all posts

23 May 2009

தலைவர் பிரபாகரன் நலம்

மூத்த உறுப்பினர்கள் பலர் வஞ்சகமாக கொல்லப்பட்டுள்ளனர்": செ.பத்மநாதன் [செவ்வாய்க்கிழமை, 19 மே 2009, 09:08 மு.ப ஈழம்] [வி.நவராஜன்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த இயக்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன், ஆனால், தூரதிர்ஷ்டவசமாக தமது இயக்கத்தின் பல மூத்த உறுப்பினர்கள் வஞ்சகத்தனமாகக் கொல்லப் பட்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். "சிறிலங்கா அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருப் பதாகப் பிரகடனப் படுத்தலாம். ஆனால் இது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை சிறிலங்கா அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கையை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகவே இழந்துவிட்டது" எனவும் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டியில் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.
அவரின் பேட்டியின் முக்கிய விபரங்கள் வருமாறு:

இந்தப் போரில் வெற்றி பெற்றிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருக்கின்றது. இந்தப் போரில் உண்மையிலேயே சிறிலங்கா வெற்றிபெற்றுள்ளதா?

சிறிலங்கா அரசாங்கம் நிரூபிக்க முடியாத ஒரு உரிமை கோரலை வெளியிட்டிருக்கின்றது. எமது தேசியத் தலைவர் உயிருடனும் நலமாகவும் உள்ளார் என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஆனால், எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிரிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை. இது மிகவும் தூரதிர்ஷ்டமானது. ஆனால், எமது மக்களுடைய விருப்பங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்.

சிறிலங்கா இராணுவம் தமக்கு ஒரு இராணுவ வெற்றி கிடைத்திருப்பதாகப் பிரகடனம் செய்யலாம். ஆனால் அது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களுடைய நம்பிக்கையை இவர்கள் முற்றாகவே இழந்துவிட்டனர்.

தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் பார்க்கும்போது விடுதலைப் புலிகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு இராணுவ வழிமுறைகளில் அல்லாமல் ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளையே முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் எமது முன்னய அறிக்கைகள் பலவற்றிலும் தெளிவாகத் தெரிவித்திருந்தோம். எமது மக்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த நிலைப்பாட்டை நாம் எடுத்தோம். தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசியும், எறிகணைகளால் தாக்குதல் நடத்தியும் அவர்களைப் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் போரைப் பயன்படுத்துவதை தொடர்ந்தும் அனுமதிக்க நாம் விரும்பவில்லை.

இந்த விவகாரத்தில் தலையிட்டு தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும், இதனைக் கருத்திற்கொள்ளாமல் தாக்குதல் நடவடிக்கையை தொடர்வதிலேயே சிறிலங்கா அரசு குறியாக இருந்தது. எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி வெள்ளைக்கொடிகளை ஏந்தியவாறு சரணடைய முன்வந்த எமது போராளிகளும் தலைவர்களும் அனைத்துலக நடவடிக்கைகள் அனைத்தையும் மீறும் வகையில் ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கின்றார்கள். இந்த விடயத்தில் ஒரு பலமான நிலைப்பாட்டை எடுத்து சிறிலங்கா அரசாங்கத்தை இணங்கச் செய்வதற்கும் அனைத்துலக சமூகம் மறுத்துவிட்டது.

இந்த நிகழ்வுகளையிட்டு நாம் மிகவும் வருந்துகின்றோம். ஆனால், இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்காலமும் தமிழ்த் தேசியப் பிரச்சினையும் தீர்வு எதுவும் இன்றி தொடர்ந்திருக்கப் போகின்றது.
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுப்பதற்கான தமது பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமது ஆணையை மக்கள் வழங்கியிருக்கின்றனர். இவ்வாறு மக்கள் எமக்கு அளித்துள்ள ஆணையின் அடிப்படையில் பொருத்தமான மாற்றுத் திட்டங்களையிட்டுப் பரிசீலனை செய்வதற்கு எமது அமைப்பு தயாராக இருக்கின்றது.

நீங்கள் அரசியல் தீர்வு ஒன்று தொடர்பாகப் பேசுகின்றீர்கள். ஆனால் கொழும்பு வெளிப்படுத்தும் உணர்வுகளும், தமிழ் மக்களுடைய விருப்பங்களைப் புரிந்துகொள்ளாதவாறு நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் மனநிலையும் இதற்கு ஏற்றதாக உள்ளதா?

சிங்கள மக்களிடம் இருந்து வெளிப்படும் உணர்வுகளும் அவர்களின் போக்கும் துரதிர்ஷ்டமானதாகவே இருக்கின்றது. அந்த நாட்டில் தமிழர்கள் சம உரிமை கொண்ட குடிமக்களாக கருதப்பட்டால் அவர்கள் கெளரவத்துடன் நடத்தப்பட வேண்டும். ஆனால், அரசாங்கமும் அதன் இராணுவத்தினரும் பேரினவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலேயே தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இது, இனங்களுக்கு இடையேயான பிளவுகளை மேலும் அதிகப்படுத்துவதற்கே வழிவகுப்பதாக இருக்கும் என்பதுடன், பகை உணர்வுக்கு முடிவைக் கொண்டுவருவதற்கும் தடையாகவே இருக்கும்.

'விடுதலைப் புலிகளுக்குப் பிற்பட்ட காலம்' எனப் பேசப்படுகின்றது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளால் மக்களை எவ்வாறு அணிதிரட்டி அதற்கான தலைமையை வழங்க முடியும்?

எமது தேசியப் பிரச்சினை ஆசியாவின் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. தற்போது உருவாகியிருக்கும் நிலைமைகளுக்கு இசைவாக எமது தந்திரோபாயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது எமது தலைமைக்குத் தெரியும். புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணி திரண்டு தமது தீவிரமான ஆதரவை உலகம் முழுவதிலும் வெளிப்படுத்தியிருந்தமையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வன்னியில் இடம்பெற்றுள்ள கொடூரம் தமிழர்களிடையேயான ஒற்றுமையை மேலும் பலப்படுத்தியிருக்கின்றது.
இதனைத் தனித்துநின்று சாதிக்க முடியாது என்பது எமக்குத் தெரியும். தமிழர்களின் நலன்களையும், அவர்களுடைய எதிர்காலத்தையும் உறுதிப்படுத்துவதற்காக இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ தமிழர்கள் அல்லது தமிழ் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளக்கூடிய பங்களிப்பை நாம் வரவேற்கின்றோம். இதனை அடைவதற்காக இந்தியாவில் உள்ள தமிழ்க் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுவதற்கு நாம் விரும்புகின்றோம்.

தமிழர்களின் இந்த தேசியப் பிரச்சனையின் அடிப்படையில் பல தமிழ்க் கட்சிகள் முன்னர் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை மேற்கொண்டிருந்தன. அவர்கள் அந்தக் கோட்பாடுகளுக்கு இப்போதும் கெளரவம் கொடுப்பார்கள் என நாம் நம்புகின்றோம். இந்த நிலையில் அதனை அடைவதற்காக இணைந்து செயற்படுவதற்கு அவர்கள் முன்வருவார்கள் என நாம் நம்புகின்றோம்.

09 April 2009

பிரபாகரன் மகனும் விகடன் கட்டுரையும்

இலங்கையை அதிர வைத்துள்ள பிரபாகரன் மகனும், விகடன் கட்டுரையும்!

சென்னை: ஆனந்த விகடனின் 30 ஆண்டு கால இலங்கைக்கான ஏஜென்ட் ஸ்ரீதர்சிங் நேற்று பயங்கரவாத தடுப்பு காவல் துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படக் காரணம் விகடனில் வெளியாகியுள்ள ஒரு பரபரப்புக் கட்டுரைதான்.

'பிரபாகரன் மகன்' எனும் தலைப்பில் வெளியாகியுள்ள அந்த அதிரடிக் கட்டுரையை இங்கு தருகிறோம்

விகடன் கட்டுரை ..

சார்லஸ் ஆன்டனி - 20 ஆண்டுகள் கழித்து சிங்கள அரசாங்கத்துக்கு மீண்டும் ஒரு புலி சொப்பனமாக மாறியிருக்கும் பெயர்!

அன்று இருந்த ஆன்டனி, பிரபாகரனின் ஆத்மார்த்தமான நண்பன். இன்று இருக்கும் ஆன்டனி, உயிருக்குயிரான மகன்!

சார்லஸ் ஆன்டனியைப் பிரபாகரனால் மறக்க முடியாது. 25 ஆண்டுக்கு முன்னால், சாவகச்சேரி காவல் நிலையத்தைக் கைப்பற்றிய சம்பவம்தான் ஜெயவர்த்தனே அரசாங்கத்துக்குப் புலிகள் மீது பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது.

ஒரு பஸ்ஸைக் கடத்தி, அதில் சார்லஸ் தலைமையிலான புலிப் படை காவல் நிலையத்தை நோக்கி வந்தது. இயந்திரத் துப்பாக்கிகள் முழங்க உள்ளே நுழைந்த சார்லஸ், அங்கு ஆயுத அறை எங்கே இருக்கிறது என்று தேடினார்.

ஒரு ரிவால்வர், 28 துப்பாக்கிகள், இரண்டு இயந்திரத் துப்பாக்கிகள் என இருந்ததை அள்ளிக்கொண்டு வெளியேறினார்கள்.

சார்லஸைக் குறிவைத்துத் தேடியது சிங்கள ராணுவம். யாழ்ப்பாணத்துக்குப் பக்கத்தில் மீசாலை என்ற இடத்தில் அவர் தங்கி இருப்பதாகத் தகவல் கிடைக்க… போய் இறங்கினார்கள்.

பனை மரங்களுக்குள் ராணுவம் பதுங்கியிருக்க, வெட்டவெளியில் மாட்டிக் கொண்டனர் சார்லஸூம் இரண்டு போராளிகளும். முதல் குண்டு நெஞ்சில் பாய்ந்தது. உயிரோடு தான் பிடிபடக் கூடாது என்று நினைத்த சார்லஸ், ‘என்னைக் கொன்றுவிடு. எந்தப் புலியையும் ராணுவம் உயிரோடு பிடிக்கக் கூடாது’ என்று சக போராளிக்கு உத்தரவு போட்டார். அவன் சம்மதிக்கவில்லை. மீண்டும் கட்டாயப்படுத்தி கெஞ்சினார் சார்லஸ். கடைசியில் அழுதுகொண்டே சுட்டான் அவன்.

‘பிரபாகரன் இந்த அளவுக்கு உடைந்துபோய் நான் பார்த்ததில்லை’ என்று கிட்டு சொல்லும் அளவுக்கு அந்த மரணம் பிரபாகரனைப் பாதித்தது. ஆன்டனியை மறக்க முடியவில்லை அவரால். இரண்டு ஆண்டுகள் கழித்து தனக்கு மகன் பிறந்தபோது, ‘சார்லஸ் ஆன்டனி’ என்று பெயர் வைத்தார். மீசாலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட சார்லஸ் மீண்டு வருவான் என்று சிங்கள ராணுவம் கனவிலும் நினைத்திருக்காது. சாதாரணமாக சைக்கிளில் போய் இயக்கத்தை வளர்த்த பிரபாகரன், இன்று விமானத்தை வைத்து சிங்கள அரசுக்குச் சிக்கல் கொடுத்துவரும் குடைச்சலின் பின்னணியில், அவரது மகன் சார்லஸ் இருப்பதாகச் சந்தேகப்படுகிறது சிங்கள அரசு.

விமானக் குண்டுவீச்சில்தான் சார்லஸின் வாழ்க்கையே ஆரம்பிக்கிறது. இன்று சார்லஸூக்கு 23 வயது. அவர் பிறந்த காலங்களில்தான் சிங்கள ராணுவம் அதிகமாக விமானப் படைத் தாக்குதலைத் தொடங்கியது. இதிலிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும் என்று புலிகள் மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். ‘குண்டுவீச்சில் இருந்து பாதுகாப்பு’ என்ற புத்தகம் போட்டு வீடு வீடாகக் கொடுத்தார்கள். அம்மா மதிவதனியுடன் பெரும்பாலும் பதுங்கு குழிகளில்தான் வளர்ந்தார் சார்லஸ். புதுக்குடியிருப்புப் பள்ளியில் தொடக்கக் கல்வி படித்தார். அட்வான்ஸ் லெவல் வரை படித்ததாகச் சொல்கிறார்கள். அதாவது, இங்கு நம் ப்ளஸ் டூ போல. ஜெனரல் சர்டிஃபிகேட் ஆஃப் எஜுகேஷன் என்று இதற்குப் பெயர்.

இதை அவர் முடிக்கும்போது இலங்கையில் போர்ச் சூழல் குறைந்து ரணில் விக்கிரமசிங்கே ஆட்சிக் காலம் ஆரம்பமானது. எனவே, தன்னை உயர் படிப்புக்காக வெளி நாட்டுக்கு அனுப்பிவைக்க மகன் ஆசைப்பட்டுக் கேட்கிறார். ‘ அது பாதுகாப்பானதல்ல’ என்று பிரபாகரன் நினைக்கிறார்.

கொழும்பில் படிக்க அனுப்பலாமா என்ற யோசனை. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் வாங்கி இருக்கிறார்கள். ஆனால், அதையும் வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால், மகனது படிப்புக்குத் தடை போட பிரபாகரனுக்கு மனமில்லை. காரணம், சார்லஸின் டெக்னாலஜி ஆர்வம்.

சின்ன வயதில் இருந்தே எதையாவது பிரித்து மேய்வதில் ஈடுபாடு காண்பித்திருக்கிறார். போர்ப் பயிற்சிகளைவிட, போர் ஆயுதங்களைக் கையாளுவது, அது பற்றி படிப்பதில்தான் ஆர்வம் அதிகம் இருந்திருக்கிறது.

முதலில் ஏற்பட்டது கப்பல் ஆர்வம். படகுகள் கட்டும் பிரிவில் ஈடுபாடு காட்டியிருக்கிறார். சில மாதங்களில் கம்ப்யூட்டரைக் கையாளும் ஆர்வமாக அது மாறியிருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி ஆஸ்திரேலியாவில் இருந்து கம்ப்யூட்டர் படித்த 8 பையன்கள் கிளிநொச்சிக்குள் வந்திறங்கினர். அவர்கள் சார்லஸூக்குக் கற்றுக்கொடுத்தனர்.

அந்த எட்டு பேரும் பிரபாகரனால் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டவர்கள். கிளிநொச்சியில் இருந்து படிப்பில் ஆர்வமான பையன்களை பிரபாகரன் தேர்ந்தெடுத்து, பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆஸ்திரேலியா அனுப்பி வைத்தாராம்.

அவர்கள், அங்குள்ள மொனாஸ் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் படித்ததாக சிங்களப் பத்திரிகை ‘தி பொட்டம்லைன்’ எழுதுகிறது. சார்லஸூக்கு கம்ப்யூட்டர் கற்றுக்கொடுத்த ஆசான்கள் இவர்கள்தானாம். இதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பப் பிரிவில் சார்லஸ் வலம் வந்தார்.

அடுத்ததாக, கிளிநொச்சிக்கு வந்து இறங்கியதுதான் இப்போது கலக்கிக்கொண்டு இருக்கும் வான் படை. இளம் நீல நிற வரிப்புலிச் சீருடையும் ‘வானோடி’ என்று பொறிக்கப்பட்ட சின்னத்தையும் பொருத்தி ஒரு படை கட்ட வேண்டும் என்பது பிரபாகரனின் பல்லாண்டுக் கனவு.
அவருடன் அப்பையா அண்ணை என்று ஒருவர் ஆரம்ப காலத்தில் இருந்திருக்கிறார். அவர்’நான் விமானம் செய்யப் போறேன்’ என்று சில வேளைகளில் ஆர்வம் காட்டி இருக்கிறார். அப்போது, எல்லாரும் அவரைக் கிண்டல் செய்வார்களாம்.

கடற்படையில் வேலை பார்த்த தனது நண்பன் டேவிட் மூலமாக ‘கடற்புலி’களை ஆரம்பித்த பிரபாகரன், வான் படைக்கு ஒரு நண்பரைத் தேடினார். சங்கர் கிடைத்தார். கனடாவில் ஏரோநாட்டிக்ஸ் படித்தவர். ஏர் கனடாவில் வேலை பார்த்தவர். முதல் கட்டமாக பழைய விமானம் வாங்கப்பட்டது.

மாவீரர் துயிலுமிடம், வற்றாப்பளை அம்மன் கோயில் ஆகிய இடங்களில் 10 ஆண்டுகளுக்கு முன் இந்த விமானத்தை வைத்துப் பூத் தூவினார்கள். ‘பிரபாகரன் வைத்திருக்கும் விமானம் பூ தூவத்தான் லாயக்கு’ என்று சிங்களத் தளபதிகள் காமென்ட் அடித்தார்கள்.

‘விமானங்களை வாங்குவதற்கு முன் இயக்குவதற்கு ஆட்களைத் தயார் பண்ணுங்கள்’ என்று சங்கர் சொல்ல, ஒரு டீம் பிரான்ஸ், மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ‘சம்பந்தப்பட்ட நாட்டில் கொண்டுபோய்விட வேண்டியது எங்கள் வேலை.அங்கேயே ஏதாவது வேலை பார்த்துப் படித்து முடிக்க வேண்டியது உங்களது சாமர்த்தியம்’ என்ற அடிப்படையில் 20 பையன்கள் அனுப்பப்பட்டார்கள்.

வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்களும் உதவ, படிப்பை முடித்து 2002-ல் இந்தக் குழு கிளிநொச்சி வந்து இறங்கியது. இவர்கள் விமானப்படை சம்மந்தமான தொழில்நுட்பங்களை சார்லஸூக்கு ஊட்டினார்கள்.

அவர்களுக்கு தீனியாக சிறு விமானங்கள் தயாராக இருந்தன. ஒரு ஆள் மட்டும் பயணிப்பவை. செக்கோஸ்லோவேகியா நாட்டின் ‘சிலின் இசட் 143 எல்’ ரக விமானங்கள் இவை.

நாங்கள் புலிகளுக்கு விற்கவில்லை என்று அந்த நாடு மறுக்கிறது. வாங்கியதை அப்படியே பயன்படுத்தாமல், அதில் பல மாறுதல்களைச் செய்துள்ளார்களாம். இங்குதான் சார்லஸின் முக்கியப் பங்கு இருந்ததாகச் சொல்கிறார்கள். இப்போது வான் படையை ரத்னம் மாஸ்டர் என்பவர் வழிநடத்தி வருகிறாராம். சிறு விமானத்தை அதிக பயன்பாடு உள்ளதாக மாற்றும் வேலையை சார்லஸ் டீம் பார்த்து வருகிறது.

600 கி.மீ தூரம் போய் திரும்பத்தான் அதில் எரிபொருள் நிரப்ப முடியும். அதாவது ஒரு முறை கொழும்பு போய்விட்டுத் திரும்ப முடியும்.

விமானத்தில் குண்டு நிரப்பிக்கொண்டு போய் ஓர் இடத்தைத் தாக்க வேண்டும் என்று முடிவெடுக்கும்போது, அவ்வளவு எடையைக் கொண்டுசெல்ல இந்த விமானங்கள் வசதிப்படவில்லையாம்.

எனவே, சுமார் 240 கிலோ எடைகொண்ட குண்டுகளைப் பொருத்தும் பலம்கொண்டதாக மாற்றும் காரியங்களை சார்லஸ் டீம் பார்த்ததாம். அதே போல், ரேடாரின் கண்ணுக்குப் படாமல் தப்பிக்க வைக்கவும் இவர்களது குழு பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறது.

சமீபத்தில் நடந்த தாக்குதலுக்காக இரவு 8.30-க்குக் கிளம்பிய புலிகளின் விமானத்தை 9.20-க்குத்தான் சிங்களப் படை அறிய முடிந்திருக்கிறது.

அதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இத்தனைக்கும் சண்டை அதிகமாக நடக்கும் புதுக்குடியிருப்புக்குத் தென் மேற்குப் பகுதியில் இருந்துதான் விமானங்களைக் கிளப்பியிருக்கிறார்கள்.

ஒரு விமானம் வீழ்த்தப்பட்டது. இன்னொன்று வருமான வரிக் கட்டடத்தின் 3-வது மாடிக்கும் 12-வது மாடிக்கும் மத்தியில் புகுந்தது. 240 கிலோ குண்டு வெடித்ததில் அந்தக் கட்டடமே தீப்பிடித்து எரிந்தது.

புலிகள் வைத்திருக்கும் விமானத்தை ‘குரும்பட்டி மெஷின்’ என்று சிங்களவர்கள் கிண்டல் செய்வார்களாம். வளர்ச்சியின் ஆரம்பத்தில் இருக்கும் தேங்காய்க்குக் குரும்பு என்று பெயர். அந்தக் குரும்பை வைத்து இதுவரை எட்டு முறை குடைந்தெடுத்துவிட்டார்கள்.

அதுவும் குண்டுகளைக் கட்டிக் குதிக்கும் வான் கரும்புலிகள் வந்த பிறகு அச்சம் அதிகமாகி இருக்கிறது. ‘பலவீனமான இனத்தின் பலமான ஆயுதம்தான் கரும்புலிகள்’ என்று பிரபாகரன் சொல்கிறார்.

‘உன்னுடைய எதிரி உனக்கு எந்தக் கஷ்டத்தைக் கொடுத்தானோ, அதையே அவனுக்குத் திருப்பிக் கொடு’ என்பது இந்தக் கரும்புலிகளின் லட்சிய முழக்கமாம். ‘காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்’ என்று வான் புலிகளின் சட்டையில் எழுதப்பட்டிருக்கிறது.

அதுதான் கண்டம்விட்டுக் கண்டம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது!

நன்றி: விகடன்

ஏற்கெனவே புலிகளின் விமான தாக்குதல் மற்றும் சார்லஸ் ஆன்டனியின் வான்படை வழிநடத்தும் திறன் போன்றவை குறித்து செய்திகள் வெளியிட்டதாலேயே உதயன் மற்றும் எதிரொலியின் பிரதம ஆசிரியர் ந.வித்யாதரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Quelle - Thats tamil