21 March 2007

4 போராளிகள்- 1 தமிழீழ காவல்துறை வீரரின் வீரச்சாவு

[செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2007, 18:03 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 4 போராளிகளினதும் தமிழீழ காவல்துறை வீரர் ஒருவரினதும் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர்.

விபரம் வருமாறு:

11.03.07 இல் மட்டக்களப்பு மாவட்டம் பன்குடாச்சேனைப் பகுதியில் முன்னேறிய சிறிலங்கா இராணுத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

வீரவேங்கை சிவராம் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பாலப்போடி ரவிச்சந்திரன் என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

18.03.07 இல் மட்டக்களப்பு உன்னிச்சை 8 ஆம் கட்டை பகுதியில் முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

மேஜர் மாறன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜா கனகராஜா என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

19.03.07 இல் யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

2 ஆம் லெப். கணேசன் என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை சொந்த முகவரியாகவும் மருத்துவமனை வீதி அம்பலப்பெருமாள்குளம் அக்கராயனை தற்காலிக முகவரியாகவும் கொண்ட அப்துல் ஜபார் கணேசன் என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

19.03.07 இல் யாழ். தென்மராட்சி கிளாலிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

லெப். கதிர் என்று அழைக்கப்படும் ஜீவநகர் இடதுகரை முத்தையன்கட்டு ஒட்டுசுட்டானைச் சேர்ந்த பாலகிருஸ்ணன் மோகனதாஸ் என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

19.03.07 அன்று மன்னார் மாவட்டம் மடு சின்னத்தம்பனை பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது தமிழீழ காவல்துறையின் தலைமைக்காவலர் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

தலைமைக்காவலன் நந்திவர்மன் என்று அழைக்கப்படும் திருகோணமலை மாவட்டத்தை சொந்த முகவரியாகவும் சீ.மாரியம்மா 6 ஆம் குறுக்கு ஆனைவிழுந்தான் கிளிநொச்சியை தற்காலிக முகவரியாகவும் இலக்கம் 18 இடைத்தங்கல் முகாம் வட்டுவாகலை வேறு முகவரியாகவும் கொண்ட கிருபாகரன் நந்திவர்மன் என்ற தலைமைக்காவலரே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

இம் மாவீரர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றனர்.

மணலாற்று ஆக்கிரமிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள விடுதலைப் புலிகள் தயார்

சு.ப.தமிழ்ச்செல்வன்

திங்கட்கிழமை, 5 மார்ச் 2007, 15:10 ஈழம்] [புதினம் நிருபர்]

தமிழர் தாயகத்தில் மணலாற்றுப் பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள சிறிலங்காப் படையினர் முழுமையான தயார்படுத்தலை மேற்கொண்டுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கும் இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை 11.30 மணிமுதல் 1.30 மணிவரை கிளிநொச்சியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பு முடிவுற்ற பின்னர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணல்:

கேள்வி: இன்றைய சந்திப்பு தொடர்பாக?

பதில்: தற்போதைய நிலைமைகள் தொடர்பாக இன்று கலந்துரையாடினோம். முக்கியமாக போர் நிறுத்த உடன்பாட்டை சீர்குலைத்து சிறிலங்காப் படைகள் எமது தாயகத்தின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள வன்முறைகள், ஆக்கிரமிப்பு முயற்சிகள், படுகொலைகள், ஆட்கடத்தல்கள், குண்டுவீச்சுக்கள், மனித உரிமை மீறல்கள் பற்றி சந்திப்பில் விரிவாக விளக்கினோம்.

இந்த விடயங்களில் அனைத்துலக சமூகம் வன்முறைகளை நிறுத்தி அமைதி முயற்சிகளை முன்னெடுக்கும் படி கோரி வரும் நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் யுத்த வெறிப் போக்கும், மனிதப் படுகொலைகள் தொடர்பாகவும் அனைத்துலக சமூகம் ஒரு மென்மையான போக்கை கடைப்பிடிக்கின்ற நிலைப்பாடு எதிர்காலத்தில் அமைதி முயற்சிகளை முன்னெடுக்கின்ற சாத்தியப் பாடுகளை சீர்குலைக்கும் என்ற ஆபத்தான சூழலையும் சந்திப்பில் சுட்டிக்காட்டினோம்.

அனைத்துலக சமூகம் தற்போது கடைப்பிடித்து வரும் அணுகுமுறை சிறிலங்கா அரசாங்கத்தை ஒரு வழிக்கு கொண்டு வரப்போவதில்லை. இது இலங்கைத் தீவை இரத்தக் களரி நிலைக்குத் தான் கொண்டு வரப்போகின்றது. யுத்த நிறுத்த உடன்பாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

அண்மையில் பல நாட்டுத் தூதுவர்கள் அடங்கிய குழுவை மட்டக்களப்புக்கு அழைத்து வந்தபோது ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பாக எமது கவலையையும் எமது நிலைப்பாட்டையும் தெளிவிபடுத்தியிருந்தோம்.

சிறிலங்கா அரசாங்கத்தினாலும் அதன் படைத்தரப்பினாலும் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்ட நடவடிக்கையாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டினோம். எமது விசாரணைக் குழுவின் அறிக்கையின் படி சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்ட ரீதியில் வெளிநாட்டு இராஐதந்திரிகளை ஆபத்தான சூழ்நிலைக்கு சிக்கவைத்து பேரழிவை ஏற்படுத்தி அனைத்துலக மட்டத்தில் தமிழர்களுடைய போராட்ட முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் அபகீர்தியை ஏற்படுத்தும் வகையில் ஒரு திட்டமிட்ட ரீதியில் சிறிலங்கா படைத் தரப்பினரால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான விடயங்களை இன்றைய சந்திப்பில் ஆதாரங்களுடன் விளக்கினோம். தூதுவர்கள் மட்டக்களப்புக்கு பயணம் செய்வது தொடர்பான செய்தியை மனிதாபிமான அமைப்புக்கள் ஊடாகவோ ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களின் ஊடாகவோ எமக்கு எந்த தகவல்களையும் தரவில்லை. தகவல்களை எமக்கு தெரியப்படுத்தாமல் தூதுவர்கள் வந்து இறங்கும் இடத்திலிருந்து தொடர்ச்சியாக காலையில் தாக்குதலை நடத்திவிட்டு பின்னர் தூதுவர்களை அவ்விடத்தில் வானூர்திகள் மூலம் தரையிறக்குவது என்பது பொருத்தமற்ற விடயம். தூதுவர்களை ஆபத்தான சூழலுக்குள் கொண்டு செல்வதாகும். அது ஒரு சதி நடவடிக்கை என்பதையும் சந்திப்பில் விளக்கினோம்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக எங்களுடைய தாயகப் பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை. மனிதாபிமான பணியாளர்கள் வெளிநாட்டு இராஐதந்திரிகள், ஊடகவியலாளர்கள் எமது பகுதிக்கு வந்து செல்வதுடன் பணியாற்றுகின்றனர். மட்டக்களப்புச் சம்பவம் சிறிலங்கா படைத்தரப்பினரால் திட்டமிட்ட சதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை நோர்வேத் தூதுவர் ஆகிய தாங்கள் ஏனைய வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கும் படி வேண்டியிருக்கின்றோம்.

முக்கியமாக எமது தாயகப் பகுதிகளை கூடுதலாக ஆக்கிரமிக்க சிறிலங்கா அரசாங்கம் முயன்று கொண்டிருக்கின்றது. தென் தமிழீழத்தில் சம்பூர், வாகரை போன்ற பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டு தென் தமிழீழத்தில் பாரியளவில் படை நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. அதே போன்று மணலாறு பகுதியை ஆக்கிரமிப்பதற்கும் முல்லைத்தீவு மீது பாரியளவிலான படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் சிறிலங்காப் படைத்தரப்பு ஈடுபட்டுள்ளது.

மணலாற்றுப் பகுதியில் பாரியளவில் படைகளை குவித்து ஆயுத தளபாடங்களை நகர்த்தி பாரியதொரு படை நடவடிக்கைக்கு சிறிலங்கா படை தயாராகி வருகின்றது என்பதை நோர்வே தூதுவருக்கு இன்று சுட்டிக்காட்டியுள்ளோம்.

சிறிலங்கா அரசாங்கம் ஒரு போதும் தனது இராணுவ முன்னெடுப்புக்களை கைவிடுவதாகவோ, அல்லது நிறுத்துவதாகவோ இல்லை. போர் நிறுத்த உடன்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் மதிக்கப்போவதில்லை. அனைத்துலக சமூகத்தின் கரிசனைகளை சிறிலங்கா அரசாங்கம் மதித்து நடக்கும் நிலையில் இல்லை. சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகவே யுத்த வெறிப்போக்கொடு பாரியளவில் தமிழ் மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்தும் வகையில் தான் செயற்பாடுகளில் இறங்கியிருக்கின்றார்கள்.

இவற்றுக்கு உதாரணமாக கிழக்கில் இடம்பெற்ற சம்பவங்களும் முல்லைத்தீவு, மணலாறு பகுதிகளை ஆக்கிரமிக்க பாரியளவில் சிறிலங்காப் படைகள் தயாராகிக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டினோம். மணலாற்றில் இருக்கின்ற எமது படையணிகள் சிறிலங்காப் படைகள் குவிக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். எமது உளவுத் தகவல்களின் அடிப்படையில் மணலாற்றில் சிறிலங்கா படைகள் ஆயுத தளபாடங்களை குவித்துள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

சிறிலங்காப் படைகளின் முயற்சிகளை முறியடிப்பதற்கு எமது படையணிகளும் தயராகிக்கொண்டிருக்கின்றது. இது ஒரு பாரியளவிலான யுத்தமாக வெடிக்கும் என்பதை சுட்டிக்காட்டினோம். சிறிலங்காப் படைகளின் இப்படியான முயற்சிகள் மகிந்த ராஐபக்ச அரசின் இலங்கைத் தீவையே முழு யுத்த களத்திற்கு கொண்டு செல்லுகின்ற நிலையினை உருவாக்கும் என்பதை சுட்டிக்காட்டி எமது கண்டனத்தையும் தெரிவித்தோம்.

இந்த நிலையில் அனைத்துலக சமூகம் மென்மையான போக்கை கடைப்பிடிப்பது சிறிலங்கா அரசாங்கத்திற்கு தூண்டுதலாக அமைகின்றது. தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் பொறுமை காக்கின்ற நிலைமை ஏற்படாது. அனைத்து யுத்திகளையும் தந்திரோபாயங்களையும் பயன்படுத்தி கடந்த காலங்கள் போல பரந்த அளவில் தீவிரப்படுதும் நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

அனைத்துலக சமூகம் தமிழீழ விடுதலைப் புலிகளை கண்டிப்பது, ஒருதலைப்பட்சமாக குற்றம் சுமத்துவதை தவிர்க்க வேண்டும். சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களையும் பார்த்துவிட்டு எமது நடவடிக்கைகள் தீவிரம் அடையும் போது கண்டனம் தெரிவிப்பதில் அர்த்தம் இல்லை என்பதை அனைத்துலக சமூகத்திற்கு தெளிவாக்கும் படி நோர்வே தூதுவரிடம் கோரியிருக்கின்றோம்.

கேள்வி: இணைத் தலைமைகள் நாடுகளிடமிருந்து ஏதாவது செய்திகள் எடுத்து வரப்பட்டதா?

பதில்: இணைத் தலைமை நாடுகளின் செய்திகள் என்று எதுவும் எடுத்து வரப்படவில்லை. அனைத்துலக சமூகத்தின் கரிசனையாக வன்முறைகள் நிறுத்தப்பட்டு சமரச முயற்சிகள் மீண்டும் தொடக்கப்பட வேண்டும் என்பது அனைத்துலக சமூகத்தின் விரும்பமாகும்.

நாம் அனைத்துலக சமூகத்திடம் முன்வைத்த நிலைப்பாடு எந்த அடிப்படையில் இதனை முன்னெடுப்பது என்பதாகும். யுத்த நிறுத்த உடன்படிக்கை என்பது பல தசாப்தங்களாக இடம்பெற்ற உக்கிர சமருக்கு ஒரு சிறிய இடைவெளியாவது கொடுத்து அதற்கான பாதையை திறந்து விட்டது.

போர் நிறுத்த உடன்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் தூக்கியெறிந்து, சிறிலங்கா அரசாங்கம் கூட ஏன் மகிந்த ராஐபக்ச கூட போர் நிறுத்த உடன்பாட்டை விமர்சித்து இருக்கின்றார். அரச மட்ட அமைச்சர்கள் கூட போர் நிறுத்த உடன்பாட்டை விமர்சித்து உதாசீனப்படுத்தியிருக்கின்றார்கள். நடைமுறையில் சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்த உடன்பாட்டை மீறிவரும் நிலையில் வன்முறைகளை நிறுத்தி பேச்சுக்களை முன்னெடுப்பது என்பது பற்றி கேள்வி எழுப்பினோம்.

அனைத்துலக சமூகம் எதனையும் கொண்டு வரும் நிலையில் இல்லை. சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக அளவில் மனிதாபிமான அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள் என குற்றம் சுமத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மனிதப் பேரவலம் இலங்கைத் தீவில் அதிகரித்துள்ளது. உலக நாடுகளில் மிக மோசமாக மனித உரிமை மீறும் நாடாக பட்டியல் வகிக்கும் நாடுகளில் சிறிலங்கா முதன்மையான இடத்தை பிடித்துள்ளது. இது அனைத்துலக அளவில் ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்துலக நாடுகள் இராணுவ பொருளாதார உதவிகளை அனைத்துலக சமூகம் நிறுத்தி சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவில்லை என்பது எமது மக்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினோம்.

கேள்வி: அணுசரணைப் பணியில் ஈடுபட்டுபட்டிருக்கின்ற நோர்வேத் தரப்பு இதுவரை சிறிலங்காப் படைகளின் ஆக்கிரமிப்பு அத்துமீறல்கள் தொடர்பாக அதனை நிறுத்துவதற்கான அழுத்தத்தை சிறிலங்கா அரசிற்கு கொடுக்கவில்லை ஏன்?

பதில்: இது தொடர்பான கவலையையும் நாங்கள் தெரிவித்திருக்கின்றோம். நோர்வே அணுசரணையாளர்களும் அனைத்துலக சமூகமும் சிறிலங்கா அரசாங்கத்தின் வலிந்த தாக்குதல்களை படை நடவடிக்கைளை பாரிய மனித உரிமை மீறல்களை தடுக்கவில்லை ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவிலை என்பதை நாங்கள் இன்று சுட்டிக்காட்டினோம். அது தொடர்பான கவலையையும் தெரிவித்திருக்கின்றோம்.

Quelle - Puthinam

சிறிலங்காவின் வெற்றிப் பெருமிதமும் தலைக்குனிவும்

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2007, 06:48 ஈழம்] [கி.தவசீலன்]

"மட்டக்களப்பை விட்டு விடுதலைப் புலிகளை விரட்டியடித்து விட்டோம் என்ற சிறிலங்கா அரசின் கூற்று பொய் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. வெளிநாட்டு இராஐதந்திரிகள், சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் 'பாதுகாப்புப் படைகள்' வெற்றிப்பாதையில் வீறுநடை போடுகின்றனர் என்ற கூற்றைக்கூட சிறிதளவும் மெய்யென்று நம்பமுடியாமல் செய்துவிட்டது".


இவ்வாறு ஜேர்மனியில் வெளியாகும் நாளேடுகளில் ஒன்றான General-Anzeiger நேற்று முன்தினம் புதன்கிழமை (28.02.07) வெளியிட்ட செய்தியில் சிறிலங்கா அரசை எள்ளி நகையாடியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் உள்ள வெபர் விளையாட்டு மைதானத்தில் உலங்குவானுர்தியில் இருந்து இறங்க முற்பட்ட வேளை இடம்பெற்ற எறிகணை வீச்சுத் தாக்குதலில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் காயமடைந்த செய்தி பற்றி எழுதும்போதே அந்நாளேட்டின் செய்தியாளர் இவ்வாறு எழுதியுள்ளார்.

அந்நாளேட்டின் செய்தியாளர் வில்லி கேர்முண்ட் முதலில் வெற்றிப் பெருமிதமும் பின்னர் தலைக்குனிவும்' எனத் பெருந்தலைப்பிட்டும், 'இராஜதந்திரிகள் மீதான தாக்குதலில் சிறிலங்கா அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் பற்றி அழகாகப் பேசுகிறது என்று தெரியவந்துள்ளது' எனச் சிறுதலைப்பிட்டும் சிங்கப்பூரிலிருந்து அச்செய்தியினை எழுதியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கச் செய்திகளின்படி சிறிலங்காப் படையினரால், விடுதலைப் புலிகள் மட்டக்களப்புப் பகுதியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

பேரழிவு நிவாரண, மனித உரிமைகளுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க இராஜதந்திரிகளை இப்பிரதேசங்களுக்கு அழைத்துச்சென்று 'எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது' என்று காட்டமுயன்றபோதே கிட்டத்தக்க பேரழிவுக்குச் சமமான இச்சம்பவம் இடம்பெற்றது. ('எவ்வளவு பாதுகாப்பானது' என்பதை இச்செய்தியாளர் மேற்கோள் குறியிட்டு இகழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.)

இரு உலங்குவானூர்திகளில் ஒன்று விருந்தாளிகளுடன் தரையிறங்கியபோதே இரு எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. ஜேர்மனிய தூதுவர் ஜூர்கவன் வீத் காயமடையாமல் தப்பியவர்களில் ஒருவர். அவரது அமெரிக்க நண்பர் றொபேர்ட் ஓ பிளேக் இடது கையில் காயப்பட்டுள்ளார். ஆனால் இத்தாலிய இராஜதந்திரி பியோ மரியாணி உள்ளுர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிய உலோகத்துண்டு அவரது தலையிலிருந்து அகற்றப்பட்டது. மொத்தமாக காயமடைந்தவர்கள் 11 பேர்.

தமிழர்களின் சுதந்திர நாட்டுக்காகப் போராடும் விடுதலைப் புலிகளின் தரப்பு பேச்சாளர் ஒருவர் இத்துரதிர்ஸ்ட சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார். உலங்குவானூர்தியில் இராஜதந்திரிகள் இருந்ததை தாங்கள் அறிந்திருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்கா, தனது தரப்புச் செய்தியில் இது 'விடுதலைப் புலிகளுக்கு' முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது என்று தெரிவித்தது. தமது சொந்த நாவிலேயே இவர்கள் ஏற்கனவே துரத்தியடிக்கப்பட்டார்கள் என்று முன்னர் தெரிவித்திருந்தனர்.

இப்போது சிறிலங்கா அரசு தலையில் துண்டைப் போட வேண்டியதாக போய்விட்டது. மட்டக்களப்பை விட்டு விடுதலைப் புலிகளை விரட்டியடித்து விட்டோம் என்ற சிறிலங்கா அரசின் கூற்று பொய் என்று வெட்ட வெளிச்சமாகிவிட்டது. வெளிநாட்டு இராஜதந்திரிகள், சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் 'பாதுகாப்புப் படைகள்' வெற்றிப்பாதையில் வீறுநடை போடுகின்றனர் என்ற கூற்றைக்கூட சிறிதளவும் மெய்யென்று நம்பமுடியாமல் செய்துவிட்டது.

2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் தற்போது மீறப்பட்டுவிட்டது. கடந்த வருடத்தில் மட்டும் 4,000 பேர் மீண்டும் மூண்ட போரில் உயிரிழந்துள்ளனர். இலங்கையின் வடபகுதியிலுள்ள வவுனியா நகரம் மனித நடமாட்டமின்றி வெறிச்சோடியுள்ளது.

ஏனெனில் பல்லாயிரக்கணக்கான குடிமக்கள் சிறிலங்காப் படைகள் தாக்குதல் நிகழ்த்தலாம் என்ற அச்சத்தால் உயிரைக்கையில் பிடித்தபடி வெளியேறியுள்ளனர். இராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நோர்வேக்குழு ஒன்றுகூட வவுனியாவை விட்டு வெளியேறியுள்ளது.

கடந்த வாரங்களில் தென்கிழக்குப்பகுதியில் தமது நிலைகள் மீது கொழும்புப்படைகள் தாக்குதல் தொடுத்தபோது விடுதலைப் புலிகள் சுழித்துக்கொண்டு தப்பிவிட்டனர். பாகிஸ்தானிய ஆலோசகர்களின் வழிகாட்டலுடன் பறந்த வான்படை விமானம் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது தாக்குதலை நடத்தியது.

சிறிலங்காப் படையினரின் வெற்றியும், விடுதலைப் புலிகளின் தற்பாதுகாப்பு பின்வாங்கல் நடவடிக்கைகளும் கொழும்பில் உள்ள சிறிலங்கா அரசின் வெற்றிப் பெருமிதத்தை இந்த இராஜதந்திரிகள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் அடங்கிய உலங்குவானூர்தி மீதான தாக்குதல் முடிவுக்குக்கொண்டு வந்துள்ளது.

இருந்தபோதிலும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தமிழர்களை விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிப்பதற்கு முயற்சிப்பதான தனது கூற்றை அப்படியே தொடர்ந்தும் கூறிக் கொண்டிருக்கலாம். இராணுவ வெற்றி அல்லது இராணுவ ஆலோசனை மூலம் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசையில் தனது நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வைக்கலாம் என்று அவர் நினைக்கின்றார்.

விடுதலைப் புலிகள் கடந்த வாரத்தில் 2002 இல் செய்யப்பட்ட போர் நிறுத்தத்தில் இனியும் தாம் பிணைக்கப்பட்டிருப்பதாக உணரவில்லை என்றும் தாயகம் வேண்டிய ஆயுதம் தாங்கிய போராட்டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இராஜதந்திரிகள் பயணம் செய்த உலங்குவானூர்தி மீதான நேற்றைய (27.02.07) தாக்குதல் நடவடிக்கை காட்டுவது இனிதாக்குதல் விடயத்தில் அவர்கள் அடுத்தவர் மீது சிறிதளவு கரிசனை மட்டுமே காட்டுவார்கள் என்பதையே.

இவ்வாறு அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Quelle - Puthinam