21 March 2007

சிறிலங்காவின் வெற்றிப் பெருமிதமும் தலைக்குனிவும்

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2007, 06:48 ஈழம்] [கி.தவசீலன்]

"மட்டக்களப்பை விட்டு விடுதலைப் புலிகளை விரட்டியடித்து விட்டோம் என்ற சிறிலங்கா அரசின் கூற்று பொய் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. வெளிநாட்டு இராஐதந்திரிகள், சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் 'பாதுகாப்புப் படைகள்' வெற்றிப்பாதையில் வீறுநடை போடுகின்றனர் என்ற கூற்றைக்கூட சிறிதளவும் மெய்யென்று நம்பமுடியாமல் செய்துவிட்டது".


இவ்வாறு ஜேர்மனியில் வெளியாகும் நாளேடுகளில் ஒன்றான General-Anzeiger நேற்று முன்தினம் புதன்கிழமை (28.02.07) வெளியிட்ட செய்தியில் சிறிலங்கா அரசை எள்ளி நகையாடியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் உள்ள வெபர் விளையாட்டு மைதானத்தில் உலங்குவானுர்தியில் இருந்து இறங்க முற்பட்ட வேளை இடம்பெற்ற எறிகணை வீச்சுத் தாக்குதலில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் காயமடைந்த செய்தி பற்றி எழுதும்போதே அந்நாளேட்டின் செய்தியாளர் இவ்வாறு எழுதியுள்ளார்.

அந்நாளேட்டின் செய்தியாளர் வில்லி கேர்முண்ட் முதலில் வெற்றிப் பெருமிதமும் பின்னர் தலைக்குனிவும்' எனத் பெருந்தலைப்பிட்டும், 'இராஜதந்திரிகள் மீதான தாக்குதலில் சிறிலங்கா அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் பற்றி அழகாகப் பேசுகிறது என்று தெரியவந்துள்ளது' எனச் சிறுதலைப்பிட்டும் சிங்கப்பூரிலிருந்து அச்செய்தியினை எழுதியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கச் செய்திகளின்படி சிறிலங்காப் படையினரால், விடுதலைப் புலிகள் மட்டக்களப்புப் பகுதியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

பேரழிவு நிவாரண, மனித உரிமைகளுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க இராஜதந்திரிகளை இப்பிரதேசங்களுக்கு அழைத்துச்சென்று 'எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது' என்று காட்டமுயன்றபோதே கிட்டத்தக்க பேரழிவுக்குச் சமமான இச்சம்பவம் இடம்பெற்றது. ('எவ்வளவு பாதுகாப்பானது' என்பதை இச்செய்தியாளர் மேற்கோள் குறியிட்டு இகழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.)

இரு உலங்குவானூர்திகளில் ஒன்று விருந்தாளிகளுடன் தரையிறங்கியபோதே இரு எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. ஜேர்மனிய தூதுவர் ஜூர்கவன் வீத் காயமடையாமல் தப்பியவர்களில் ஒருவர். அவரது அமெரிக்க நண்பர் றொபேர்ட் ஓ பிளேக் இடது கையில் காயப்பட்டுள்ளார். ஆனால் இத்தாலிய இராஜதந்திரி பியோ மரியாணி உள்ளுர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிய உலோகத்துண்டு அவரது தலையிலிருந்து அகற்றப்பட்டது. மொத்தமாக காயமடைந்தவர்கள் 11 பேர்.

தமிழர்களின் சுதந்திர நாட்டுக்காகப் போராடும் விடுதலைப் புலிகளின் தரப்பு பேச்சாளர் ஒருவர் இத்துரதிர்ஸ்ட சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார். உலங்குவானூர்தியில் இராஜதந்திரிகள் இருந்ததை தாங்கள் அறிந்திருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்கா, தனது தரப்புச் செய்தியில் இது 'விடுதலைப் புலிகளுக்கு' முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது என்று தெரிவித்தது. தமது சொந்த நாவிலேயே இவர்கள் ஏற்கனவே துரத்தியடிக்கப்பட்டார்கள் என்று முன்னர் தெரிவித்திருந்தனர்.

இப்போது சிறிலங்கா அரசு தலையில் துண்டைப் போட வேண்டியதாக போய்விட்டது. மட்டக்களப்பை விட்டு விடுதலைப் புலிகளை விரட்டியடித்து விட்டோம் என்ற சிறிலங்கா அரசின் கூற்று பொய் என்று வெட்ட வெளிச்சமாகிவிட்டது. வெளிநாட்டு இராஜதந்திரிகள், சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் 'பாதுகாப்புப் படைகள்' வெற்றிப்பாதையில் வீறுநடை போடுகின்றனர் என்ற கூற்றைக்கூட சிறிதளவும் மெய்யென்று நம்பமுடியாமல் செய்துவிட்டது.

2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் தற்போது மீறப்பட்டுவிட்டது. கடந்த வருடத்தில் மட்டும் 4,000 பேர் மீண்டும் மூண்ட போரில் உயிரிழந்துள்ளனர். இலங்கையின் வடபகுதியிலுள்ள வவுனியா நகரம் மனித நடமாட்டமின்றி வெறிச்சோடியுள்ளது.

ஏனெனில் பல்லாயிரக்கணக்கான குடிமக்கள் சிறிலங்காப் படைகள் தாக்குதல் நிகழ்த்தலாம் என்ற அச்சத்தால் உயிரைக்கையில் பிடித்தபடி வெளியேறியுள்ளனர். இராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நோர்வேக்குழு ஒன்றுகூட வவுனியாவை விட்டு வெளியேறியுள்ளது.

கடந்த வாரங்களில் தென்கிழக்குப்பகுதியில் தமது நிலைகள் மீது கொழும்புப்படைகள் தாக்குதல் தொடுத்தபோது விடுதலைப் புலிகள் சுழித்துக்கொண்டு தப்பிவிட்டனர். பாகிஸ்தானிய ஆலோசகர்களின் வழிகாட்டலுடன் பறந்த வான்படை விமானம் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது தாக்குதலை நடத்தியது.

சிறிலங்காப் படையினரின் வெற்றியும், விடுதலைப் புலிகளின் தற்பாதுகாப்பு பின்வாங்கல் நடவடிக்கைகளும் கொழும்பில் உள்ள சிறிலங்கா அரசின் வெற்றிப் பெருமிதத்தை இந்த இராஜதந்திரிகள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் அடங்கிய உலங்குவானூர்தி மீதான தாக்குதல் முடிவுக்குக்கொண்டு வந்துள்ளது.

இருந்தபோதிலும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தமிழர்களை விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிப்பதற்கு முயற்சிப்பதான தனது கூற்றை அப்படியே தொடர்ந்தும் கூறிக் கொண்டிருக்கலாம். இராணுவ வெற்றி அல்லது இராணுவ ஆலோசனை மூலம் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசையில் தனது நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வைக்கலாம் என்று அவர் நினைக்கின்றார்.

விடுதலைப் புலிகள் கடந்த வாரத்தில் 2002 இல் செய்யப்பட்ட போர் நிறுத்தத்தில் இனியும் தாம் பிணைக்கப்பட்டிருப்பதாக உணரவில்லை என்றும் தாயகம் வேண்டிய ஆயுதம் தாங்கிய போராட்டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இராஜதந்திரிகள் பயணம் செய்த உலங்குவானூர்தி மீதான நேற்றைய (27.02.07) தாக்குதல் நடவடிக்கை காட்டுவது இனிதாக்குதல் விடயத்தில் அவர்கள் அடுத்தவர் மீது சிறிதளவு கரிசனை மட்டுமே காட்டுவார்கள் என்பதையே.

இவ்வாறு அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Quelle - Puthinam

No comments: