27 May 2006

கேணல் ரமணன்

படைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்
- பொட்டு அம்மான் -


கேணல் ரமணனின் சிறந்த செயற்பாடுகள் காரணமாக அவரை எமது புலனாய்வுத்துறையிலே இணைத்துப் புலனாய்வுச் செயற்பாட்டாளராக இணைக்க நான் விரும்பினேன். ஆனால் மாவட்ட தேவை கருதி அங்கொரு படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாட்டாளராகத் தனித்துவமாகச் செயற்பட்டு வந்தார் என்று விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணனின் வீரச்சாவு தொடர்பாக தமிழீழத் தேசியத் தொலைக் காட்சிக்கு தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

ரமணனை எனக்கு மிக நீண்ட நாட்களாகத் தெரியும். 1987 இன் ஆரம்பத்தில் அல்லது அதற்கு முன்னைய காலப்பகுதியில் என்று நினைக்கின்றேன்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைக்கு அண்மையாக உள்ள அம்பிலாந்துறைக் கிராமத்தில் சிறிலங்கா படையினருடைய நகர்வு ஒன்றைத் தடுத்து நடத்திய சண்டை ஒன்றிலேயே எம்முடன் இணைந்து செயற்பட்டிருந்தார். அவ்வேளையில் அவர் றீகனின் அணியிலே ஒரு போராளியாகச் செயற்பட்டிருந்தார்.

மட்டக்களப்பு அம்பாறை காடு, மேடுகள், வயல்வெளிகள் எல்லாவற்றிலும் நாம் நீண்ட பயணங்களை நீண்ட நாள்கள் ஒன்றாகச் செய்திருந்தோம். பல்வேறு நடவடிக்கைகளிலே அவர் சேர்ந்து செயற்பட்டிருந்தார். அவ்வேளையில் அவர் றீகனின் அணியிலே ஒரு போராளியாகவும் அதன் பின்னர் றீகனின் அணியிலே ஒரு பகுதிப் பொறுப்பாளராகவும் செயற்பட்டிருந்தார்.

அவரது குடும்பத்தினரதும் போராட்டப் பங்களிப்புக்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும். அதைத் தொடர்ந்து அவரது சிறந்த செயற்பாடுகள் காரணமாக அவரை எமது புலனாய்வுத்துறையிலே இணைத்துப் புலனாய்வுச் செயற்பாட்டிலே ஒருவராக இணைக்க நான் விரும்பியிருந்தேன். ஆனாலும், மாவட்டத்தின் தேவை கருதி அங்கே ஒரு படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாட்டாளராக அவர் தனித்துவமாகச் செயற்பட்டிருந்தார்.

அவர் படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த காலத்திலே வெற்றிகரமான பல நடவடிக்கைகளைச் செய்திருந்தார். அவற்றில் நான் நேரடியாக தொடர்புபட்டிருக்காத போதிலும் கூட அவருடைய நடவடிக்கைகள் எனக்கு வியப்பையும், பெருமையையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தத்தக்க வெற்றிகளை அவர் பெற்றிருந்தார்.

குறிப்பாகச் சொல்வதானால், சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரி சகபந்து என்பவர் மீது ஒரு வெற்றிகரமான கரும்புலி நடவடிக்கையையும், அதனைத் தொடர்ந்து இன்று கருணா போல் அன்று செயற்பட்ட ராசிக் என்ற துரோகி மீதான வெற்றிகரமான கரும்புலித் தாக்குதல் நடவடிக்கைகளையும் அவரது புலனாய்வுச் செயற்திறன் சார்ந்த வெற்றிகளாக மிக முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவையாகின.

கருணாவின் துரோகம் வெளிப்பட்ட வேளையிலே ரமணன் அதிர்ச்சியுற்றிருந்தார். இவ்வாறு துரோகத்திற்கான செயற்பாட்டை மனதிலே வைத்துக் கொண்டு இந்த மனிதரால் எவ்வளவு தூரம் இவ்வாறு நடிக்க முடிந்தது என அவர் ஆச்சரியப்பட்டிருக்கின்றார். அந்தத் துரோகத்தை முறியடிப்பதிலே தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். மிக ஆபத்தான பணிகளை பொறுப்பேற்றுக் களத்திலே இறங்கியிருந்தார். அது எல்லோருக்கும் தெரியும்.

தமிழீழத் தேசியத்தின் பால் அவர் கொண்டிருந்த மாறாத பற்றுறுதியும் விடுதலை என்பதில் அவருக்கிருந்த பூரணமான தெளிவும் தான் அவ்வாறான தெளிவான முடிவுகளை எடுப்பதற்கும் ஆபத்தை எதிர்கொள்வதற்கும் அவருக்கு உறுதுணையாக இருந்ததென்றால் மிகையில்லை என்றார் பொட்டு அம்மான்.

Quelle-புதினம்

கேணல் ரமணன்: ஒருபார்வை

சர்வதேசக் கண்காணிப்புடனான சமாதானம் தமிழர்கள் முதுகிலே மீண்டும் ஒருமுறை ஓங்கிக் குத்தியிருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.

இது நடைமுறையில் இருந்து வரும் போர் நிலையின் தீவிரத்தைப் பறை சாற்றுவதுடன் சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டையும் எண்ணவோட்டத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கேணல் ரமணன், எண்பத்தாறில் போராட்டத்தில் இணைந்தவர். அவருடைய மூத்த சகோதரரும் போராளி. சகோதரியும் இளைய சகோதரரும் போராளிகளாக இருந்தவர்கள். இன்னுமொரு சகோதரர் பாதை மாறிய ஒரு அமைப்பிலிருந்து விலகி, விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தபோது துரோகிகளால் கொல்லப்பட்டவர். “புலிகளின்” வீடு என்பதாலும் புலிகளை ஆதரிக்கும் வீடென்பதாலும் அவரின் தாயாரின் வீடு படையினரால் குண்டு வைத்துத் தரை மட்டமாக்கப்பட்டது.

ஆரம்பத்தில் லெப். கேணல் றீகனின் (முன்னாள் மட்டு மாவட்டத் தளபதி) அணியில் செயற்பட்ட ரமணன், இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் துணிகரமான தாக்குதல்களைச் செய்தவர். பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலத்தில் மறைந்திருந்து இந்தியக் காலாட் படைமீது தாக்குதல் நடத்தி ஆயுதங்களையும் கைப்பற்றியதால் பாராட்டும் பெற்றவர். அதன்பின் தம்பிலுவில் துரோகிகள் முகாம் தாக்குதலுக்கு அணித்தலைவராகச் சென்றிருந்தார். பூநகரி வரலாற்றுச் சமரிலும் பங்கேற்றார்.

மட்டு நகரில் நியூட்டன் அவர்களின் காலத்திலும் அதற்குப் பின்னரும் படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த கேணல் ரமணன் குறிப்பிடத்தக்க முறியடிப்புப் புலனாய்வுத் நடவடிக்கைகள் பலவற்றைச் செய்திருந்தார். மதிநுட்பத் திட்டமிடலிலும், உளவியல் போரியலிலும் திறன்கொண்டிருந்த கேணல் ரமணன் மட்டக்களப்பிலுள்ள சிறிலங்கா படைச் சிப்பாய்களின் சிம்மசொப்பனமாக விளங்கியவர்.

துரோகிகளின் செயற்பாடுகளை முடக்குவதில் திறமை காட்டிய அவர், கருணாவின் சதியை முறியடிப்பதில் மிக முக்கியமான பங்கு வகித்தவர்.
கருணா மட்டக்களப்பிலிருந்து விரட்டப்பட்ட பின்பும் தாயகத்திற்கு எதிராகச் செய்யமுனைந்த பல சதித் தாக்குதல்களைத் தடுத்த பெருமையும் ரமணனுக்கு உண்டு.

சுனாமியின் போது குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நேரடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டபோதே சிறிலங்கா படைகள் ரமணனைப் பின் தொடர்ந்தமை குறித்தற்குரியது. அதன்பின் மாவட்டத்தின் துணைத் தளபதியாக படைத்துறை மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்ட அவர், பன்சேனை திலீபன் மருத்துவ நிலையத்தை அமைப்பதற்கு இரவு பகலாக உழைத்தவர்.

தளங்களிலும் மக்களிடையேயும் ஒரு திறன்மிக்க போராளியாகவும், நாவண்மையுடைய பேச்சாளராகவும், விளையாட்டு வீரராகவும், கலைகளில் ஆர்வமுடன் பங்கேற்பவராகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ள ரமணன், அண்மைக் காலத்தில் தமது இந்திய ஆக்கிரமிப்புக்கால தலைமறைவுப் போராட்ட வாழ்க்கையை படியுங்கள் அறியுங்கள் என்பதை மட்டக்களப்புப் பதிப்பிற்காக எழுத ஆரம்பித்திருந்தார்.

அனுபவமும், தலைமைத்துவ ஆற்றலும் மண்ணின் இயல்பறிந்த செயற்பாடும் கொண்ட ஒரு தளபதியைக் கொன்றிருப்பதன் மூலம் இனப்பிரச்சனைக்கான சிறிலங்கா தரப்பின் தீர்வுமுறை முன் வைக்கப்பட்டிருப்பதாகவே தமிழர் கருத இடமுண்டு.

Quelle - Batti Eelanatham

தளபதி ரமணன் வீரச்சாவு!

தளபதி ரமணன் இராணுவத்தின் சினைப்பர் தாக்குதலில் வீரச்சாவு!
Monday, 22 May 2006

மட்டக்களப்பு மாவட்ட துணை தளபதி ரமணன் சிறிலங்கா இராணுவத்தின் சினைப்பர் தாக்குதலில் இன்று மாலை வீரச்சாவைத் தழுவினார் என செய்திகள் தெரிவிக்கின்றன. மாலை 4:30 மணிக்கு வவுணதீவு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள முன்னணி அரண் பகுதியில் இச்சம்பவம் நடந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப்புலிகளின் முன்னணி நிலைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த சமயம் சிறிலங்கா இராணுவத்தினர், தற்போதும் நடைமுறையில் இருக்கும் போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை அப்பட்டமாக மீறும் வகையில் சினைப்பர் தாக்குதலை தமது நிலைகளில் இருந்து மேற்கொண்டனர் என்று அந்த தகவல் மேலும் தெரிவிக்கின்றது. இத்தாக்குதலுக்கு இலக்கான தளபதி ரமணன் வீரச்சாவை அணைத்துக் கொண்டார்.

1966ஆம் ஆண்டு பிறந்த தளபதி ரமணன் மட்டக்களப்பு திருப்பளுகாமத்தை சேர்ந்தவர். 1986ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மூன்றாவது பயிற்சி பாசறையில் பயிற்சி பெற்றவர்.

இந்திய இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்களிலும் அக்காலத்தில் துரோக கும்பல்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களிலும் அணித்தலைவராக திறமையுடன் செயலாற்றியவர்.

விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவில் நீண்ட காலம் பணியாற்றி எதிரிகளினதும் துராகிகளினதும் பல்வேறு சதி நடவடிக்கைகளை முறியடிப்பதில் முன்னின்று செயற்பட்டவர்.

விடுதலைப் புலிகளின் படைத்துறை புலனாய்வு பிரிவில் பணியாற்றி முக்கிய தேசத்துரோகிகளுக்கு எதிராகவும் எதிரிகளுக்கு எதிராகவும் தேர்ந்தெடுத்து நடத்தப்பட்ட நடவடிக்கைகள் பலவற்றை நெறிப்படுத்தியவர்.

கருணாவின் தன்னிச்சையான நடவடிக்கையால் குழப்பம் ஏற்பட்ட போது தமிழீழத் தேசியத் தலைமைக்கு விசுவாசமான செயற்பாட்டளராக வன்னிக்கு சென்று, பின் வன்னியில் இருந்து நடவடிக்கைக்காக தன் அணியுடன் முதலில் மட்டக்களப்பைச் சென்றடைந்தவர்.

துரோகிகளை விரடடியடிப்பதில் இவரது பங்கு முக்கியமானதாக இருந்தது. பின்னர் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டு வீரச்சாவடையும் வரை பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Quelle - மட்டக்களப்பு ஈழநாதம்