27 May 2006

தளபதி ரமணன் வீரச்சாவு!

தளபதி ரமணன் இராணுவத்தின் சினைப்பர் தாக்குதலில் வீரச்சாவு!
Monday, 22 May 2006

மட்டக்களப்பு மாவட்ட துணை தளபதி ரமணன் சிறிலங்கா இராணுவத்தின் சினைப்பர் தாக்குதலில் இன்று மாலை வீரச்சாவைத் தழுவினார் என செய்திகள் தெரிவிக்கின்றன. மாலை 4:30 மணிக்கு வவுணதீவு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள முன்னணி அரண் பகுதியில் இச்சம்பவம் நடந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப்புலிகளின் முன்னணி நிலைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த சமயம் சிறிலங்கா இராணுவத்தினர், தற்போதும் நடைமுறையில் இருக்கும் போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை அப்பட்டமாக மீறும் வகையில் சினைப்பர் தாக்குதலை தமது நிலைகளில் இருந்து மேற்கொண்டனர் என்று அந்த தகவல் மேலும் தெரிவிக்கின்றது. இத்தாக்குதலுக்கு இலக்கான தளபதி ரமணன் வீரச்சாவை அணைத்துக் கொண்டார்.

1966ஆம் ஆண்டு பிறந்த தளபதி ரமணன் மட்டக்களப்பு திருப்பளுகாமத்தை சேர்ந்தவர். 1986ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மூன்றாவது பயிற்சி பாசறையில் பயிற்சி பெற்றவர்.

இந்திய இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்களிலும் அக்காலத்தில் துரோக கும்பல்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களிலும் அணித்தலைவராக திறமையுடன் செயலாற்றியவர்.

விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவில் நீண்ட காலம் பணியாற்றி எதிரிகளினதும் துராகிகளினதும் பல்வேறு சதி நடவடிக்கைகளை முறியடிப்பதில் முன்னின்று செயற்பட்டவர்.

விடுதலைப் புலிகளின் படைத்துறை புலனாய்வு பிரிவில் பணியாற்றி முக்கிய தேசத்துரோகிகளுக்கு எதிராகவும் எதிரிகளுக்கு எதிராகவும் தேர்ந்தெடுத்து நடத்தப்பட்ட நடவடிக்கைகள் பலவற்றை நெறிப்படுத்தியவர்.

கருணாவின் தன்னிச்சையான நடவடிக்கையால் குழப்பம் ஏற்பட்ட போது தமிழீழத் தேசியத் தலைமைக்கு விசுவாசமான செயற்பாட்டளராக வன்னிக்கு சென்று, பின் வன்னியில் இருந்து நடவடிக்கைக்காக தன் அணியுடன் முதலில் மட்டக்களப்பைச் சென்றடைந்தவர்.

துரோகிகளை விரடடியடிப்பதில் இவரது பங்கு முக்கியமானதாக இருந்தது. பின்னர் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டு வீரச்சாவடையும் வரை பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Quelle - மட்டக்களப்பு ஈழநாதம்

No comments: