23 May 2009

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பத்திரமாக உள்ளார்

முல்லைத்தீவு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பத்திரமாக உள்ளார், உயிருடன் உள்ளார். ஆனால் அவர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவமும், அரசும் பொய்ப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன என்று விடுதலைப் புலிகள் இயக்கம் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதால், பிரபாகரன் விவகாரத்தில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தமிழ்நெட் இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில்,

தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார்.

எமது பாசத்துக்குரிய தேசியத் தலைவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணத்தில் தொடர்பு கொள்வார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு உலகு எங்கும் பரந்து விரிந்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் ஆதரவுக் குரலை அடக்கி ஒடுக்கும் முகமாக இலங்கை அரசு, தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பான பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதில் முனைப்பாக உள்ளது.

உலக தமிழ் சமுதாயத்தினர் இந்த பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இன்று தமிழ்நெட் இணையதளத்திற்கு இந்தப் பேட்டியை அளித்துள்ளார் அறிவழகன். இலங்கையில் உள்ள தமிழ்நெட் இணையதள செய்தியாளரை ரகசிய இடத்திலிருந்து தொடர்பு கொண்டு இதைத் தெரிவித்துள்ளார் அறிவழகன். பாதுகாப்பு காரணங்களுக்காக தனது இருப்பிடத்தை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பல்வேறு புலிகள் ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர், செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இருப்பினும் விடுதலைப் புலிகள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த வார்த்தையும் இதுவரை இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் முதல் முறையாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழ்நெட் செய்தி கூறியிருப்பது பிரபாகரன் விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments: